பெண்களை முட்டாள் என திட்டிய நபர்.. நடுவானில் மல்யுத்தக் களமாக மாறிய விமானம்.. வைரல் வீடியோ..


 

விமானப் பயணத்தின்போது சில பெண்களை ஆண் பயணி ஒருவர் முட்டாள் என திட்டியுள்ளார். இதனால் கோபம் அடைந்த பெண்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே கைகலப்பு மோதல் ஏற்பட்டதால் விமானம் நடுவானில் மல்யுத்தக் களமாக மாறியது.

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தச் சம்பவம் ஏர் ஆசியா விமானத்தில் திங்களன்று நடந்திருக்கிறது.
இந்த விமானம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் செங்கடூவை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இதற்கு இடைப்பட்ட தூரத்தைக் கடப்பதற்கு 4 மணி நேரம் ஆகும். இந்நிலையில் விமானத்தில் இருந்த சில பெண்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பொறுமை இழந்த ஆண் பயணி ஒருவர் அந்தப் பெண்களை நோக்கி முட்டாள் என்று கூறியதுடன் வாயை மூடுமாறு கத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்கள் தாங்கள் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து அந்த ஆண் பயணியுடன் சண்டையில் ஈடுபட ஆரம்பித்தனர்.

 மேலும் பெண்கள் அந்த நபரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பயணி உணவு கொண்டு வரப்படும் தட்டினை வைத்து தற்காத்துக் கொள்ள முயன்றார். அதன் பின்னரும் சண்டை கடுமையாக தொடர்ந்தது.

நடுவானில் ஏற்பட்ட இந்தச் சண்டை விமானத்தை மல்யுத்தக் களமாக மாற்றியது. இதைத் தொடர்ந்து விமானப் பணியாளர்கள் விரைந்து சென்று சண்டையில் ஈடுபட்ட நபர்களை பிரிக்க முயன்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து ஏர் ஆசியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அசாதாரண சூழலை ஏர் ஆசியா பணியாளர்கள் சிறப்பாக கையாண்டு அசம்பாவிதங்களைத் தவிர்த்தனர். இந்த நிகழ்வால் விமானப் பயணம் ஏதும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் பயணிகள் விமானப் பயணத்தின்போது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்று ஏர் ஆசியா நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.