யாழில் தனிமையில் வசித்த மூதாட்டி சடலமாக மீட்பு..!

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி நேற்றைய தினம் (வெள்ளிக் கிழமை) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இணுவில் மஞ்சத்தடி கொட்டம்பனை பகுதியை சேர்ந்த தெய்வேந்திரம் வசந்தி (வயது 62) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது இரண்டு பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருவதுடன் , ஒரு பிள்ளை வெளியூரில் வசித்து வருகின்றார். அந்நிலையில் வயோதிப பெண் தனது வீட்டில் தனியே வாழ்ந்து வந்துள்ளார்.

இவரது வீட்டுக்கு அருகில் வசிக்கும் இவரது சகோதரன் வழமை போன்று இன்றைய தினம் உணவு கொடுக்க சென்ற நிலையில் சகோதரி உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கோப்பாய் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.