தமிழர் தாயகத்திற்கு விஜயம் செய்யும் இந்திய இணை அமைச்சர்!

இந்திய இணை அமைச்சர் ஒருவர் தமிழர் தாயகப் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா இலங்கை இடையேயான நல்லுறவை எடுத்துக்காட்டும் வகையில், வடபகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மத்திய நிலையத்தை திறந்து வைப்பதற்கே இவர் இன்றைய தினம் தமிழர் தாயகப் பகுதிக்கு விஜயம் செய்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்யவுள்ளார்.

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து யாழ்ப்பாணம் கலாசார மையத்தை திறந்து வைப்பதற்காகவே அவர் யாழிற்கு வருகைதவுள்ளார். அரசுமுறைப் பயணமாக இன்று யாழிற்கு வரும் இணை அமைச்சர், பெப்ரவரி 12ஆம் திகதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

இந்திய அரசின் நிதி உதவி மூலம் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாசார மையத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அடிக்கல் நாட்டினார். இந்த மையம் இந்தியா இலங்கை இடையேயான மேம்பட்ட நல்லுறவிற்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு மாகாண மக்களின் கலாசார உட்கட்டமைப்பிற்கான நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைய உள்ளது. இந்த மையம், அருங்காட்சியகம், 600 பேர் வரை அமரக்கூடிய நவீன திரையரங்கு வசதியுடன் கூடிய அரங்கம் 11 தளங்களுடன் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.