எரிந்த நிலையில் ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் : உடல்களும் மீட்பு - Full Update



ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஜர்பைஜான் எல்லையில் உள்ள அணை திறப்பு விழாவில் கலந்து கொண்டு திரும்பிய ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் நேற்றையதினம்(19) விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணித்த ஜனாதிபதி ரைசி, ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்தெல்லா மற்றும் அவர்களுடன் பயணித்த ஐவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றையதினம் குறித்த விபத்து இடம்பெற்று 15 மணி நேரத்திற்குமேல் தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்ற நிலையில், ஈரானின் கிழக்கு அசர்பைஜான் மாகாணம் தப்ரிஸ் நகர் டவில் கிராமம் அருகே உள்ள மலைப்பகுதியில் ஜனாதிபதி ரைசி பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.
 
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் உடல் இன்று மீட்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. .

அத்துடன் இப்ராஹிம் ரைசியுடன் பயணம் செய்த வெளியுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

விபத்து நடந்த அஜர்பைஜானை அண்மித்துள்ள ஜல்பா நகர் மலைப்பகுதியில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.


ஹெலிகொப்டர் விபத்தில் ஈரானின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரானின் பதில் ஜனாதிபதியாக அந்நாட்டு துணை ஜனாதிபதி முஹம்மது முக்பர் பதவியேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, ஈரானின் ஆன்மீகத் தலைவரின் ஒப்புதலில்  ஈரானின் பதில் ஜனாதிபதியாக முஹம்மது முக்பர் பதவியேற்கவுள்ளார்.

ஈரானிய அரசியலமைப்பின்படி புதிய ஜனாதிபதியை 50 நாட்களுக்குள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதிமுறையின் அடிப்படையில் பதில் ஜனாதிபதியாக முஹம்மது முக்பர் பதவியேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை ஈரானின் பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் நீதித்துறை தலைவர் ஆகியோருடன் இணைந்து இன்னும் 50 நாட்களுக்குள் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டியது  முஹம்மது முக்பரின் கடமையாகும் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேநேரம் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மரணம் தனக்கு மிகவும் வருத்தம் அளிப்பதாகக் கூறிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்


தனது எக்ஸ் தளப் பதிவில் அவருக்கு  இரங்கலை தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மறைந்த ஈரானிய ஜனாதிபதி “இந்தியா – ஈரான் இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு” பங்களித்தார் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஈரானுடன் நிற்கிறது எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேநேரம் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அமீர் அப்துல்லாஹி ஆகியோரின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் தெரிவித்துள்ளார்.


அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் ஒரு குறிப்பில் அவர் இதனை வெளியிட்டுள்ளார்.

அவர்களின் துயர மரணத்தால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரின் குடும்பத்தினருக்கும், ஈரான் நாட்டு ஜனாதிபதி இழந்து வாடும் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதிஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஈரானின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட உமா ஓயா பலநோக்குத் திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.