ஐஎம்எப் கலந்துரையாடலை புறக்கணித்த எதிரணியிருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குகிறது அரசாங்கம்..!

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுவதற்கு மீண்டும் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலுக்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அதனை பிரதான எதிர்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன புறக்கணித்தன.

எவ்வாறாயினும், இந்த கலந்துரையாடலில் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் பங்கேற்றிருந்தார்.

இதன்போது, சர்வதேச நாணய நிதியத்தின் தொழிலுட்ப மதிப்பாய்வு அறிக்கையை அவர் கோரியிருந்தார்.

குறித்த அறிக்கையை வழங்குவதற்கு நேற்றைய கலந்துரையாடலின் போது இணக்கம் காணப்பட்ட நிலையில், அதனை அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் அனுப்பி வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.