அரசாங்கத்தின் வரித் திருத்தம் பேரழிவை ஏற்படுத்தும்..! வெளியான எச்சரிக்கை

அரசாங்கத்தின் அண்மைய வரித் திருத்தம் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்காமல் செயல்படுத்தப்பட்டால், அது பின்னடைவை சந்திப்பது மாத்திரமல்லாமல், பேரழிவு சூழ்நிலைகளை ஏற்படுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.

அத்துடன், இந்த வரி அதிகரிப்பு முன்மொழிவு நாடாளுமன்றத்திலோ அல்லது நாடாளுமன்ற நிதிக் குழுவிலோ ஒப்புதலுக்காக முன்வைக்கப்படவில்லை என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நகர்வுகளில் ஒன்று

தொடர்ந்து கருத்துரைத்த அவர், " சர்வதேச நாணய நிதியத்துடன் இணங்கிக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நகர்வுகளில் ஒன்று வரி திருத்தம், அது பொதுமக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தேச சர்வாதிகார வரித் திருத்தங்கள் இன்னும் விவாதிக்கப்பட வேண்டும், அத்துடன் படிப்படியாக படிப்படியாக செயல்படுத்தப்பட வேண்டும்.

சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து பில்லியன் கணக்கான டொலர்கள் மூலம் நிதியுதவி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட போதிலும், அது எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

எனவே, சர்வதேச சந்தையின் கதவுகள் இலங்கைக்கு மூடப்பட்டுள்ளது என்பது தெரிகின்றது.

உலக வங்கி, ஆசிய வங்கி மற்றும் ஐரிஸ் வங்கி ஆகியவற்றின் கதவுகளும் இலங்கைக்கு மூடப்பட்டுள்ளன.

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள முடியும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்த போதிலும் அது நடப்பதாகத் தெரியவில்லை " எனக் குறிப்பிட்டார்.