இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உயிர் அச்சுறுத்தலால் பதவி விலகிய நீதிபதி : பதில் கூறவேண்டிய நிலையில் ரணில்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தனது பதவியில் இருந்து விலகியிருந்ததுடன் தான் வகித்து வந்த  பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

 குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினையடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இவர் பதவி விலகியதாக தனது இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் உள்நாட்டில் மாத்திரமல்லாது சர்வதேசத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 இந்த நிலையில் நீதிபதி பதவி விலகியமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை வெளியிட்டு வருவதுடன், மக்கள் மத்தியில் அதிருப்தி நிலையும் ஏற்பட்டுள்ளது.  

முதன்முதலாக எங்களது நாட்டின் சரித்திரத்திலே நீதிபதி ஒருவர் தன்னுடைய உயிர் பாதுகாப்புக்காக, அதிலும் தான் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் எழுந்திருக்கின்ற அச்சுறுத்தலின் காரணமாக பதவி விலக நேர்ந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவி விலகியுள்ளமை நாட்டில் எஞ்சி இருந்த கொஞ்ச நஞ்ச சட்ட ஆட்சிக்கும் நேரடி சவால் என பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  

ஜனாதிபதி ரணில் உடன் நாடு திரும்பி இதற்குப் பதிலளிக்க வேண்டும் என்பதோடு  சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினமும் இதற்கு பதில் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இதேநேரம் நீதிபதியின் பதவி விலகர் இந்த நாட்டின் நீதித்துறையினது சுயாதீன இயங்குநிலையை அடியோடு ஆட்டம் காணச் செய்துள்ளது  என பாராளுமன்ற உறுப்பினர், சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை சிங்கள – பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலையே இலங்கையின் அனைத்து அரச நிறுவனங்களும் முன்னெடுக்கவேண்டும். அதிலிருந்து விலக்காக நீதியை நிலைநாட்டுவதற்கு நீதிபதி ஒருவர் செயற்பட்டால் அவ்வாறு செய்வதற்கு இலங்கையின் சிங்கள – பௌத்த பேரினவாத கட்டமைப்பு இடம்கொடாது என்பதற்கு ஆகப்பிந்திய உதாரணம்தான் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவின் வெளியேற்றம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கடுமையாக சாடியுள்ளார்.

இந்நிலையில் பாராளுமன்றத்தை  ஒட்டு மொத்த தமிழ் எம்பிகளும் புறக்கணிக்க வேண்டும் என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலில் இலங்கை அரசாங்கத்தின் கோரமுகம் வெளிப்படுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

தனக்கு ஏற்படுத்தப்பட்ட உயிர் அச்சுறுத்தல் மற்றும் தொடர்ச்சியான அழுத்தங்கள் காரணமாக தனது பதவிவை துறப்பதாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா அறிவித்துள்ளமையானது, நாட்டின் நீதித்துறை எத்தகைய சவால்களை சந்தித்துள்ளது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொலைமிரட்டல் காரணமாக ஒரு நீதிபதி தப்பிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டால்  நாட்டு  மக்களின் அவல நிலையை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம் நீதிபதியை அழைப்பதற்கு சட்டமா அதிபருக்கு அதிகாரமில்லை, நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு மாத்திரம் அதற்கான அதிகாரமுள்ளது என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்..

 சட்டமா அதிபர் உண்மையிலேயே அழைத்திருந்தால் அது நீதித்துறையின் சுதந்திரத்தினை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயலும் அரசாங்கத்தின் நோக்கத்தை அது வெளிப்படுத்துகின்றது. மேலும் சட்டமா அதிபர் திணைக்களம் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது எனவும் குறிப்பிpட்டுள்ளார்.

இந்நிலையில் நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை இந்த அரசாங்கமும் நீதித் துறையும் வழங்க தயார் இல்லை என்பதை  நீதிபதி ரி.சரவணாராஜாவிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலும் அவர் பதவி விலகியமையும் வெளிப்படுத்துகின்றது என வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்களுக்கும் அழுத்தங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், எதிர்வரும் திங்கட்கிழமை(02), காலை.9.30 மணிக்கு, கிளிநொச்சி பழைய கச்சேரி முன்பாக நடைபெறவுள்ள கண்டனப் போராட்டத்தில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளை அழைப்பு விடுத்துள்ளது.