அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் படுகொலை விவகாரத்தில் தந்தை ஒருவரும் அவரது மகனும் ஈடுபட்டிருப்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டேன் பிரியசாத் படுகொலை சம்பவம் தொடர்பான தகவல்களை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு வெல்லம்பிட்டிய பொலிஸார் சமர்ப்பித்தனர்.
இதன்படி, டேன் பிரியசாத் படுகொலையில் தந்தையும் மகனும் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவருக்கும் வெளிநாடு செல்ல தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பந்துல பியால், மாதவ சுதர்ஷ ஆகியோரே இந்தக் குற்றத்துடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் கோரிக்கைகைளை ஏற்றுக் கொண்ட நீதவான், வெளிநாடு செல்வதற்கு சந்தேகநபர்களுக்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் பிற அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேநேரம் அரசியல் ஆர்வலர் டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, இந்தக் கொலையை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கஞ்சிபாண இம்ரானின் பிரிவினர் செய்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 6 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (22) இரவு, வெல்லம்பிட்டியில் உள்ள லக்சந்த செவன அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் மேல் தளத்தில் வைத்து சமூக செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு ஒரு விருந்தின் போது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த டேன் பிரியசாத், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது தோள்பட்டையில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக்களும், மார்பில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக்களும் காணப்படுதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதேநேரம் டேன் பிரியசாத் இறப்பதற்கு முன்பு பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டமை குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் வெளியிட்ட தொடர் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்புகள் சமூகத்தில் சந்தேகத்தையும் எச்சரிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
டேன் பிரியசாத்தின் துப்பாக்கிசூடு தொடர்பில் முதல் அறிவிப்பு நேற்று இரவு 10.35 மணிக்கு வெளியிடப்பட்டது.
தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் டேன் பிரியசாத் இறந்துவிட்டதாகவும், அவரது உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், அதற்கு பின்னர் சுமார் 15 நிமிடங்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இரண்டாவது அறிவிப்பில், டேன் பிரியசாத் இன்னும் இறக்கவில்லை என்றும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறுதியாக, இன்று காலை வெளியிடப்பட்ட மூன்றாவது அறிக்கையில், டேன் பிரியசாத் தீவிர சிகிச்சைப் பிரிவில் இறந்ததை பொலிஸ் திணைக்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த முரண்பாடான மற்றும் தவறான அறிக்கைகள் பொதுமக்கள் மத்தியில் நிகழ்வுகள் குறித்து சந்தேகங்களையும் கவலைகளையும் எழுப்பியுள்ளன.