இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அதை 50வீதமாக உயர்த்தி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரி விதிப்பை அமுல்படுத்துவதாக அறிவித்ததுடன் 10 சதவீத அடிப்படை கட்டணத்தையும் ட்ரம்ப் விதித்தார்.
இந்தியா மீது 25 சதவீத வரி விதிப்பு அமுல்படுத்தப்பட்டது. இது இன்று முதல் அமுலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தாவிட்டால், கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா தொடர்ந்து கொள்முதல் செய்து வரும் நிலையில், இந்தியா மீது மேலும் 25 சதவீதம் கூடுதல் வரிகளைவிதிக்கும் உத்தரவில் ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.
இதன்மூலம், அமெரிக்க சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கான மொத்த வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
‘அமெரிக்காவின் நடவடிக்கை ஏற்கக்கூடியதல்ல. இது நியாயமற்றது என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேச நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும். நாட்டு மக்களின் எரிசக்தி தேவையை உறுதி செய்வதே அரசின் முக்கிய நோக்கம் என இந்திய மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, ரஷ்யாவிடம் இருந்து உரம், யுரேனியத்தை அமெரிக்கா தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது. இதுகுறித்து ட்ரம்ப்பிடம் செய்தியாளர்கள் வினவிய போது, ‘‘எனக்கு அதுபற்றி தெரியாது. இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு சரிபார்க்கிறேன்’’ என்றார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே பொதுவில் நல்லுறவு நிலவியபோதிலும், அண்மைக்காலமாக அமெரிக்காவிற்கு எதிராக இந்தியா சற்று கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
மே 10 ஆம் திகதியன்று சமூக ஊடகங்களில் இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை அறிவித்ததற்காக ட்ரம்ப் பலமுறை பெருமை சேர்த்துள்ளார். ஆனால் அவரது கூற்றை இந்தியா மறுக்கிறது. அடுத்து, இந்தியப் பொருளாதாரம் மூழ்கிவிட்டதாக அறிவித்ததன் மூலம், ட்ரம்ப் மோடியையும் அவரது கட்சியையும் சிக்கலில் சிக்க வைத்துள்ளார்.
தவிர, அண்மைக்காலமாக அமெரிக்கா பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருவதாலும் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது. அதேநேரத்தில், ட்ரம்ப் இப்படி இந்தியாவை மிரட்டுவதற்குக் காரணம், அதிக அமெரிக்க எண்ணெய் மற்றும் எல்என்ஜி வாங்கத் தொடங்கினால், அது அமெரிக்க எரிசக்தி செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு லாபத்தை அதிகரிக்கும்.
இந்தியா மீதான அமெரிக்க அரசின் வரி விதிப்பு நியாயமற்றது என்று ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் அறிவிப்புக்கு மத்திய அரசு எதிர்வினை ஆற்றியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ஏற்கதக்கதல்ல என்று மத்திய அரசு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.