மேலும் இரு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தம் என்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்


மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம், வழங்கிய அறிக்கையின் அடிப்படையில் குறித்த மருந்துகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், இரண்டு மயக்க மருந்துகளுக்கும் பதிலாக மாற்று மருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

அனைத்து மருத்துவமனைகளுக்கும் இந்த மாற்று மருந்துகளை விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அத்தகைய இறக்குமதிகள் அங்கீகரிக்கப்படவில்லை.

அனைத்து அரச வைத்தியசாலைகளும் பாதுகாப்பாக உள்ளதாகவும் நோயாளர்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பு சுகாதார அமைச்சுக்கு இருப்பதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் 850 வகையான மருந்துகளில் 266 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைகளில் மருந்துப் பாவனை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.