ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்!

மியன்மார் முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு ஜுண்டா நீதிமன்றம், மேலும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இது, வெளியேற்றப்பட்ட தலைவரின் சிறைக் காலத்தை 17 ஆண்டுகளாக உயர்த்தியுள்ளது.தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்தை விலையை விடக்குறைவாக அரசு நிலத்தை பொதுமக்களுக்கு வாடகைக்கு விட்டது, அறக்கட்டளைக்கு கொடுத்த நிதியை பயன்படுத்தி வீடு கட்டிக் கொண்டது உள்ளிட்ட வழக்குகள் நேற்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் போது, 4 வழக்குகளில் தலா 3 ஆண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது. இதில் 3 வழக்குகளில் பெற்ற தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நான்காவது வழக்கில் பெற்ற தண்டனையை அதைத் தொடர்ந்த காலத்தில் அவர் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் கூடுதலாக 6 ஆண்டு சிறைத் தண்டனையை பெற்றுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகளை ஆங் சான் சூகி மறுத்துள்ளார். தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.விசாரணையின் போது, அவர் நல்ல ஆரோக்கியத்துடன் தோன்றினார் மற்றும் தண்டனையைத் தொடர்ந்து எந்த அறிக்கையும் அவர் வெளியிடவில்லை. கருத்துக்கு இராணுவ ஆட்சியின் செய்தித் தொடர்பாளர் தொடர்பு கொள்ள முடியவில்லை.

நீதிமன்ற விசாரணைகளில் ஊடகவியலாளர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், சூகியின் சட்டத்தரணிகள் ஊடகங்களுடன் பேசுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.சமீபத்திய தண்டனை ‘நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது’ என்று அமெரிக்கா சாடியுள்ளது.

‘ஆங் சான் சூகி மற்றும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிற அதிகாரிகள் உட்பட அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு ஆட்சியை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’ என்று வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், இந்த தண்டனையை ‘அநியாயமானது’ என்று கண்டித்ததோடு, சூ கியை உடனடியாக விடுதலை செய்யுமாறும் அழைப்பு விடுத்தார்.

நோபல் பரிசு பெற்றவருக்கு ஏற்கனவே ஊழல், இராணுவத்திற்கு எதிராக தூண்டுதல், கொவிட்-19 விதிகளை மீறியமை மற்றும் தொலைத்தொடர்பு சட்டத்தை மீறியதற்காக 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.உள்ளூர் கண்காணிப்புக் குழுவின் கூற்றுப்படி, அடக்குமுறையில் 2,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 17,000பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

77 வயதான தென்கிழக்கு ஆசிய நாட்டின் முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சி, கடந்த ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதி இராணுவத்தால் கவிழ்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.