சரணடைந்த சம்பத் மனம்பேரியை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன் தொடர்பில் சந்தேகிக்கப்படும் சம்பத் மனம்பேரியை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் வலஸ்முல்ல நீதவான் மல்ஷா கொடிதுவக்கு இன்று புதன்கிழமை (17) அனுமதி வழங்கியுள்ளார். 

இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது.

இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” மற்றும் மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த  சம்பத் மனம்பேரி, இன்று காலை வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

நீதிமன்றி்ல சரணடைந்த சம்பத் மனம்பேரியை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.