70 ரூபா குடிநீர் போத்தலை 200 ரூபாவுக்கு விற்ற நிறுவனம் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு


போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பில் கொழும்பு துறைமுக நகரத்தின் தனியார் நிறுவனமொன்றுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

70 ரூபா விலை பொறிக்கப்பட்டிருந்த போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை சம்பந்தப்பட்ட நிறுவனம் 200 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளது.

இதற்கமைய இந்த விடயம் தொடர்பிலான வழக்கு நேற்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே நீதிவான் இந்த அபராத தொகையை விதித்து தீர்ப்பளித்தார்.

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணை அதிகாரிகள் குழுவொன்று கடந்த மாதம் 16 ஆம் திகதி   கொழும்பு துறைமுக நகரத்தில் அமையப்பெற்றுள்ள குறித்த
வர்த்தக நிலையத்திற்கு சென்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இதன்போது 70 ரூபா விலை பொறிக்கப்பட்டிருந்த 500 மில்லி லீட்டர் கொள்ளளவு கொண்ட போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை குறித்த நிறுவனம் 200 ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளது.

இதனையடுத்து 2003 ஆம் ஆண்டு 9 இலக்க நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் சட்டத்தின் 20 (5) மற்றும் 68 உறுப்புரைகள் மற்றும் 2021 ஆம் ஆண்டு 20 இலக்க திருத்தம் செய்யப்பட்ட சட்டத்தின் 60 (ஏ4) உறுப்புரையின் கீழ் எதிராக குறித்த தனியார் நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.