ரோஹண விஜேவீரவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மகிந்தவிற்கு இல்லை: சாடும் எம்.பி

ரோஹண விஜேவீர (Rohana Wijeweera) உயிரிழந்த பின்னர் அவரது குடும்பத்துக்கான பாதுகாப்பு இன்று வரை சகல அரசாங்கங்களாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் (Mahinda Rajapaksa) பாதுகாப்பை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா (Ajith P. Perera) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “நிறைவேற்றப்பட்டுள்ள ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை நீக்கும் சட்டத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும். ஆனால் நாட்டு பிரஜை என்ற ரீதியில் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் அவருக்குள்ள உரிமையை நீக்க முடியாது.

முன்னாள் ஜனாதிபதியான அவரது ஓய்வூதியம், சிறப்புரிமைகள் என்பன நீக்கப்பட்டாலும் அவரது பாதுகாப்பு பலவீனப்படுத்தப்படுவதை அங்கீகரிக்க முடியாது. யுத்தத்தை நிறைவு செய்வதற்கு தலைமைத்துவத்தை வகித்தவர் என்ற அடிப்படையில் கடந்த அரசாங்கங்களானாலும், தற்போதைய அரசாங்கமானாலும், எதிர்கால அரசாங்கங்களானாலும் அவரது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய பொறுப்பை கொண்டிருக்கின்றன.

எனவே அரசியல் பழிவாங்கலுக்காக அவரது பாதுகாப்பு நீக்கப்படுவது தவறான ஒரு முன்னுதாரணமாகும். ரோஹண விஜேவீர உயிரிழந்த பின்னர் அவரது குடும்பத்துக்கான பாதுகாப்பு இன்று வரை சகல அரசாங்கங்களாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

எந்த அரசாங்கமானாலும் நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அத்தியாவசியமானதாகும். ரோஹண விஜேவீரவின் குடும்பத்துக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது எனில், மகிந்த ராஜபக்சவுக்கும் பாதுகாப்பை வழங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை.

கடந்த இரு தேர்தல்களிலும் நாட்டு மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை பிரதான காரணியாகக் கொண்டு தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருந்தனர். ஆனால் அரசாங்கத்தால் அது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பிரதான சூத்திரதாரிகள் இன்று வரை வெளிப்படுத்தப்படவில்லை. முக்கிய சாட்சிகளை வெளிப்படுத்துவதில் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. கால அவகாசத்தைக் குறிப்பிட்டு வாக்குறுதிகளை வழங்கி வாக்குகளைப் பெற்ற பின்னர், அதனை கைவிட்டுள்ளனர்.

இனிவரும் தேர்தல்களின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையோருக்கு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி வேட்பாளர்கள் வாக்குறுதியளிப்பதற்கு இடமளிக்காமல், உண்மைகளை கண்டறிந்து நாட்டுக்கு வெளிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என தெரிவித்தார்.