குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் வடோதரா மாவட் டம் பத்ரா தாலுகாவில் மஹிசாகர் ஆற்றின் குறுக்கே கம்பீரா - முஜிப்புர் பகுதிகளை இணைக்கும் பாலம் காணப்படுகின்றது.
வழமை போன்று நேற்று காலை வாகனங்களில் ஏராளமானோர் பாடசாலை, கல்லூரிகளுக்கும், வேலைக்கும் சென்று கொண்டிருந்தனர்.
திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றில் விழுந்துள்ளது. இதனால் பாலத்தில் சென்ற பலர் வாகனங்களுடன் ஆற்றில் விழுந்துள்ளனர்.
இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அப் பகுதியில் இருந்தவர்கள் ஆற்றில் நீந்திச்சென்று பலரை மீட்டுள்ளனர்.
தகவலறிந்துவிரைந்து வந்த பொலிஸார், தீயணைப்புப் படையினர், மாநில மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
முதல்கட்ட விசாரணையில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த 2 டிரக்குகள், எஸ்யுவி கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றில் விழுந்தமை தெரியவந்துள்ளது.
பாலம் இடிந்து விழுந்ததை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘பாலத்தில் விரிசல் விடும் சப்தம் பயங்கரமாக கேட்டது. சில விநாடிகளில் பாலத்தின் ஒரு பகுதி அப்படியே இடிந்து விழுந்தது’’ என தெரிவித்துள்ளனர்.
இந்த பாலத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதை பராமரிக்காமல் அலட்சியமாக விட்டுவிட்டனர். இங்கு போக்குவரத்து நெரிசல் மட்டுமன்றி, அடிக்கடி தற்கொலை செய்து கொள்வதற்கான இடமாகவும் இருந்தது. பலமுறை இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும், எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளறனர்.
காங்கிரஸ் சிரேஷ்ட தலைவர் அமத் சைதா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘ஆனந்த் - வடோதரா மாவட்டங் களை இணைக்கும் முக்கிய பாலமாக இது இருந்தது. தற்போது பாலம் இடிந்துவிட்டதால், உடனடியாக மாற்று வழிக்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தியுள்ளார்.
குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தோருக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உட்பட பலர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “குஜராத் பாலம் இடிந்து 13 பேர் இறந்ததற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், குஜராத் மாநில அரசு சார்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், முழு மருத்துவ சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்கும் என்றும் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார்.