நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் - வெளியான திடுக்கிடும் உண்மைகள்!


களுத்துறை தெற்கு - காலி வீதியில் உள்ள விடுதி ஒன்றின் பின்புறம் உள்ள தொடருந்து மார்கத்துக்கு அருகில் நேற்றைய தினம் நிர்வாண நிலையில் யுவதி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

குறித்த யுவதியின் உயிரிழப்பு தொடர்பில் விடுதிக்கு அவருடன் வந்த இருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறை விசாரணைகளில் திடுக்கிடும் உண்மைகள் சிலவும் வெளியாகியுள்ளது.

விடுதிக்கு அழைத்து வந்த கார் சாரதியே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் போது குறித்த பாடசாலை மாணவி நேற்று முன்தினம் (06) மாலை 6.30 மணியளவில் இரண்டு ஆண்கள் மற்றும் யுவதி ஒருவருடன் குறித்த விடுதிக்கு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரும் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து குறித்த விடுதியில் இரு அறைகளை முன்பதிவு செய்துள்ளனர்.

இரு அறைகள் முன்பதிவு செய்திருந்த போதும், நான்கு பேரும் ஒரே அறையில் இருந்து மது அருந்திக் கொண்டிருந்ததை விடுதியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கண்டுள்ளார்.

அதன்பின்னர், ஒரு ஆணும், மற்றைய பெண்ணும் விடுதியை விட்டு வெளியேறி சென்றுள்ளனர்.

சுமார் 20 நிமிடங்களுக்குப் பின்னர், மற்றைய நபரும் மிகுந்த பதற்றத்துடன் விடுதியை விட்டு வெளியேறுவதை ஊழியர்கள் கண்டதாக கூறியுள்ளனர்.

விடுதிக்கு உணவு எடுக்க வந்த நபர் ஒருவர் விடுதியை ஒட்டியுள்ள ரயில் தண்டவாளத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக கிடப்பதாக விடுதி ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து யுவதி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவி விடுதிக்குள் செல்வதற்கு வயது குறைவாக இருந்தமையால் வேறு ஒருவரின் தேசிய அடையாள அட்டையை சமர்ப்பித்து விடுதிக்குள் நுழைந்துள்ளமை காவல்துறை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

திடீரென விடுதி அறையை விட்டு பயத்துடன் வெளியேறிய இளைஞன், முன்னர் விடுதியில் இருந்து வெளியேறிய இளைஞனையும், யுவதியையும் அழைத்து அவசரம் எனத் தெரிவித்து வெளியேறியுள்ளார்.

உயிரிழந்த யுவதி மூன்றாவது மாடியில் இருந்து ரயில் தண்டவாளத்தில் குதித்ததாக கூறிய இளைஞன் பின்னர் அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளார் என கைதானவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ரயில் தண்டவாளத்தில் கிடந்த யுவதியின் சடலத்தை மற்றைய இளைஞனும், யுவதியும் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு, இரவு 9.30 மணியளவில் காவல்துறையில் சரணடைந்துள்ளனர்.

உயிரிழந்த யுவதியுடன் கடைசி நேரம் வரை தங்கியிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபரான இளைஞனை களுத்துறை தெற்கு காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தப்பி சென்ற இளைஞர் தற்போது இரண்டு பெண்களை திருமணம் செய்துள்ளதுடன், இரண்டாவது திருமணம் செய்த பெண்ணிடம் காவல்துறையினர் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.