விமானம் புறப்பட தயாராக இருந்தபோது ஏற்பட்ட அனர்த்தம் : பல விமான சேவைகள் இரத்து

இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில், விமானத்தின் இன்ஜினுக்குள் சிக்கி, 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் இதன் காரணமாக விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.



இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் நேற்று வோலோடியா நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ319 என்ற விமானம் ஸ்பெயினின் அஸ்டூரியாஸுக்கு செல்ல ஓடுதளத்தில் தயாராக இருந்தது. அப்போது, விமானம் அருகே ஓடிக்கொண்டிருந்த நபர் விமானத்தின் இன்ஜினுக்குள் உள்ளிழுக்கப்பட்டுள்ளார்.


இதையடுத்து அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நபர் 35 வயது உடையவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் விமானத்தின் இன்ஜினால் அவர் உள்ளிழுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


 இந்த சம்பவத்துக்குப் பின்னர், உயிரிழந்தது பயணியோ விமான ஊழியரோ அல்ல. 154 பயணிகளும் 6 பணியாளர்களும் விமானத்தில் பாதுகாப்பாக இருக்கின்றனர் என வோலோடியா விமான நிறுவனம் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.


இந்த விபத்து காரணமாக ஏராளமான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. சில விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்குத் திருப்பிவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.