சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணி, தன்னை பார்க்க வந்தவர்களுக்கும், தனக்கு உதவி செய்பவர்களுக்கும் நன்றி தெரிவித்து உருக்கமான வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் போண்டா மணி. இலங்கை தமிழரான போண்டா மணி 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், வேலாயுதம் ஆகிய படங்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
குறிப்பாக வடிவேலுவுடன் சேர்ந்து இவர் செய்த லூட்டிகள் இன்றளவும் மீம் டெப்லேட்டுகளாக இணையத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளன. பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி கேம் ஷோவில் அவ்வப்போது கலந்து கொண்டார்.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் போண்டா மணி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதால் அவருக்கு உதவித் தேவைப்படுவதாக நடிகரும் போண்டா மணியின் நண்பருமான பெஞ்சமின் கண்ணீர் மல்க அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கோரிக்கை வைத்தார்.தனக்கு உதவி செய்பவர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் போண்டா மணி வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ”எனக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தவுடன் நடிகர் விஜய் சேதுபதி 1 லட்சம் ரூபாய் அளித்துள்ளார். வடிவேலு உதவி செய்வதாக தெரிவித்துள்ளார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு சார்பில் எல்லா செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் என்னை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர். நான் சம்பாதித்தது இது தான். அனைவருக்கும் நன்றி” என அந்த வீடியோ பதிவில் உருக்கமாக கூறியுள்ளார்.