டெக்சாஸ் ஜெப ஆலய சம்பவம்-02 பேர் இங்கிலாந்தில் கைது!

டெக்சாஸில் உள்ள ஜெப ஆலயத்தில் பணயக்கைதிகளை சிறைப்பிடித்த சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இங்கிலாந்தில் இரண்டு பதின்ம வயதுடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவத்தின் முக்கிய நபரான பிளாக்பர்னைச் சேர்ந்த பிரித்தானியரான 44 வயது மாலிக் பைசல் அக்ரம், கோலிவில்லில் பொலிஸாருடனான மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தநிலையில், இச்சம்பவத்தை தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை தெற்கு மன்செஸ்டரில் இரண்டு பதின்ம வயதுடையவர்களை கிரேட்டர் மன்செஸ்டர் பொலிஸார் கைது செய்துள்ளனர். எனினும் கைது செய்யப்பட்ட இருவரின் வயது அல்லது பாலினம் பற்றிய விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.உள்ளூர் சமூகங்களுடன் தொடர்பு கொள்வதாகவும், அமெரிக்க விசாரணையில் தொடர்ந்து உதவி வருவதாகவும் கிரேட்டர் மன்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தாக்குதல் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர்கள் மேலும் கூறினர்.அமெரிக்க பொலிஸ் வட்டாரங்களின்படி, அக்ரம் இரண்டு வாரங்களுக்கு முன்பு நியூயோர்க்கின் ஜேஎஃப்கே சர்வதேச விமான நிலையம் வழியாக நாட்டை வந்தடைந்தார்.அக்ரமின் சகோதரர் குல்பர் பிளாக்பர்ன், முஸ்லிம் சமூகத்தின் முகநூல் பக்கத்தில் ஒரு அறிக்கையில், அவரது சகோதரரின் மரணத்தை உறுதிப்படுத்தினார். அவர் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டார், மேலும் தனது சகோதரர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.