உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய நீதியை, காலம் தாழ்த்தாது தாம் பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.
கர்தினால் மல்கம் ரஞ்சித்தின், 50 ஆவது ஆண்டு குருத்துவ பணி நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட போதே, ஜனாதிபதி இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்
கொழும்பு ஆயர் இல்லத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில், மல்வத்து பீடத்தை சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட பல சர்வமதத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி
நாட்டில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு, கர்தினால் மல்கம் ரஞ்சித், பல தசாப்தங்களாக தம்மை அர்ப்பணித்துள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு, தம்மீதான அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது, அவர் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பாடுபடுகின்றார்.
இந்த நிலையில் அரசாங்கத்தினால், அரசாங்கத்திற்கு எதிராக விசாரணை செய்ய வேண்டிய நேரம் ஏற்பட்டுள்ளது. எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் இந்த விடயத்தில் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும்.
காலஓட்டத்தில் மூடிமறைக்க இடமளிக்காது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
அதற்கமைய, உரிய பொறிமுறையினூடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் நீதி நிலைநாட்டப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது இங்கு உரையாற்றிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,
75 ஆண்டுகால சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஜனாதிபதியினால் முடிந்திருப்பது பாராட்டுதலுக்குரிய விடயமாகும்.
அத்தோடு நாட்டில் பல்வேறு இனக்குழுக்களிடையே வெறுப்பை விதைக்கும் அரசியல் கலாசாரத்தை வேரோடு ஒழிக்க முடிந்திருப்பது குறித்தும் தனது நன்றியைத் தெரிவிப்பதாக கூறினார்.