கொழும்பிலுள்ள சொகுசு வீட்டில் பயங்கரவாக செயற்பாடுகள்..! : தேவாலயங்களுக்கு வரும் அடையாளம் தெரியாதவர்கள் குறித்து அவதானம்..!



உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட  நபர்கள் தெஹிவளை மற்றும் பேருவளை பிரதேசங்களில் அமைந்துள்ள இரண்டு சொகுசு வீடுகளை பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த மனுக்கள் நேற்று பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட போது, பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் வெளியான தகவல்களின் அடிப்படையில் குறித்த இரு வீடுகளிலும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ஷமிந்த விக்ரம நீதிமன்றில் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த வீடுகள் தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பான வகுப்புகளை நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேநேரம் தேவாலயங்களுக்கு வரும் அடையாளம் தெரியாத நபர்கள் தொடர்பில் அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

தவக்காலத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு கத்தோலிக்க தேவாலயங்களிலும் தற்பொழுது பல ஆராதனை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு நடைபெறும் ஆராதனைகளில் பங்கேற்க வரும் புதியவர்கள் அல்லது அடையாளம் தெரியாதவர்கள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதான தேவாலயங்களில் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமானவர்கள் தொடர்பில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.