நாட்டில் 3 தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2009ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படுகிறது.
வருடாந்தம் மே மாதம் 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் மிகவும் பேரெழுச்சி இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும் வடகிழக்கின் பல பகுதிகளில் வீதிகள் வெறிச்சோடிய நிலையில் காணப்படுவதுடன், இறுதி யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூர்ந்து ஆலயங்கள் மற்றும் பொது இடங்களிலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன்களை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் மக்கள் ஈடுபட்டுவருவதை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்;தனர்.
இதேநேரம் இறுதி யுத்தத்தில் மக்கள் பட்ட துன்பங்களை காட்சிப்படுத்தி சுமந்தபடி, ஊர்தி முள்ளிவாய்க்கால் நோக்கி சென்று கொண்டிருந்த போது, புதுக்குடியிருப்பு பொலிஸார் இடையில் மறைத்து குறித்த ஊர்தியை சோதனையிட்டுள்ளனர்.
அதன் பின்னர், சாரதியிடம் உழவு இயந்திரத்தின் ஆவணங்களை காண்பிக்குமாறு கூறி குறித்த ஆவணங்களை தொலைபேசியில் புகைப்படமும் எடுத்துள்ளனர்.
மேலும், குறித்த ஊர்தியை, பொலிஸார் நீண்ட நேரமாக வழிமறித்து பின் செல்லுமாறு அனுமதித்துள்ளதால் சற்று நிமிடம் அந்த இடத்தில் குழப்பநிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேநேரம் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று அதிகாலை நந்திக்கடலில் மலர்தூவி சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினார்.
இதேவேளை வடக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் ஆக்னெஸ் காலமர்ட் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் அஞ்சலி செலுத்தினார்.
இதேநேரம் தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
தமிழரசு கட்சியின் மன்னார் கிளை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் மன்னார் நகர் பகுதியில் உள்ள தந்தை செல்வா சிலை பகுதியில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதேநேரம் மன்னாரில் இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிலையில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை அனுஸ்டிக்கும் பொருட்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் செயற்பாடு அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பகுதியில் உள்ள வளத்தாப்பிட்டி, வீரமுனை பகுதிகளில் வெள்ளிக்கிழமை(17) மாலை இடம்பெற்றது.
இதேவேளை கடந்த ஆண்டைப்போன்று இம்முறையும் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு இன்று (18) காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் நடைபெற்றது.
கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் 'சிங்கள ராவய' அமைப்பினரால் குழப்பம் விளைவிக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறையும் பிற தரப்பினரால் இடையூறு ஏற்படுத்தப்படக்கூடும் என்ற சந்தேகம் நிலவியது. அதன்படி நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த கடற்கரைப்பகுதிக்கு அண்மையில் காலையிலேயே பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
அதனையடுத்து 9.30 மணியளவில் அங்கு கூடியிருந்த அனைவரும் ஈகைச்சுடரேற்றி, அதில் வெண்ணிற மலர்தூவி போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்தனர். இந்நினைவுகூரல் இடம்பெற்றுக்கொண்டிருந்த தருணத்தில், பிறிதொரு குழுவொன்று கொடிகளை ஏந்தி கூச்சலிட்டவாறு கடற்கரைப்பகுதிக்குள் உட்பிரவேசித்து நினைவேந்தல் நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க முற்பட்ட வேளையில், அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரால் அவர்கள் தடுத்துநிறுத்தப்பட்டனர்.