தங்காலை சம்பவம்..: நெருங்கி தொடர்பிலிருந்த தெற்கு அரசியல்வாதிகள்.. விரைவில் கைதாகுவார்கள் என அரசாங்கம் தகவல்


போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகளுடன் தெற்கு அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் உள்ளமை தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை மாலை நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்த அவர்,

  நாட்டில் பாரதூரமான இரண்டு பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. அதாவது திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகம் என்பன உள்ளன.
இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவையே. கடந்த காலங்களில் அரசாங்கங்கள் பின்பற்றிய அரசியல் கலாச்சாரத்தின் பெறுபேறாகவே இந்த குற்றச் செயல்கள் அதிகரித்தன.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் பாதாளகுழு செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தது.
அதன் பெறுபேறுகள் தற்போது கிடைக்கின்றன.

பாதாள உலகச் செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் வியாபாரத்துக்கு அரசியல் ஆசீர்வாதம் மற்றும் அரசியல் தொடர்புகள் இருக்கின்றன.
இப்போது நாங்கள் இந்த அரசியல் கலாசாரத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம்.
இப்போது தங்காலையில் மூன்று லொறிகளில் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்செயல்களுடன் அரசியல் வாதிகளுக்கு தொடர்புள்ளதாக தெரியவருகின்றது.
குறிப்பாக தெற்கு அரசியல்வாதிகளுக்கு தொடர்புகள் உள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை பொதுமக்கள் தற்போது தகவல்களை வழங்கி வருகின்றனர். பொலிஸாரும், புலனாய்வு துறையினரும் சரியாகசெயற்பட்டு வருகின்றனர்.
மக்கள் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை பயமின்றி வழங்க முடியும்.
இரகசியம் பேணப்படும். பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க நாங்கள் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்போம்
மாத்தறை மற்றும் தங்காலை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, லொறியில் சுமார் 10 கிலோகிராம் 'ஐஸ்' கண்டுபிடிக்கப்பட்டது.

அதே இடத்தில் இரண்டு உடல்களும் கண்டெடுக்கப்பட்டன, மேலும் முழுமையான விசாரணை நடந்து வருகிறது.

இந்த சோதனையின் போது, மூன்று பெரிய லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 705.91 கிலோகிராம் ஹெராயின் மற்றும் 'ஐஸ்' ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.

லொறிக்குள் ஐந்து ரிவால்வர்கள் மற்றும் ஒரு டி-56 துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் சுமார் 15 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் தற்போது அந்த நாடுகளில் சிறையில் இருப்பதாகவும், அவர்கள் இந்நாட்டிற்கு நாடு கடத்தப்பட உள்ளனர்.
அண்மைய நாட்களில் இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட கெஹெல்பத்த பத்மே உள்ளிட்ட பாதாள உலக உறுப்பினர்களிடமிருந்தும் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி கடத்தல் மற்றும் இந்த கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் தேவையான விசாரணைகள் முடிந்ததும் சட்டம் முறையாக செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

இந்த பெரிய அளவிலான சோதனைகள் மற்றும் தகவல் கசிவுகள் ஒரே நேரத்தில் நிகழும் காரணங்களை விளக்கிய அமைச்சர், முந்தைய அரசியல் கலாசாரத்தின் கீழ் பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகள் மோசமடைந்துள்ளதை விளக்கியுள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தை அரசியல் மயமாக்கலில் இருந்து விடுவித்து, அவர்கள் சுதந்திரமாக செயல்பட தேவையான சூழலை உருவாக்குவதே தற்போதைய அரசின் முக்கிய நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.