33 வயது நாடாளுமன்ற உறுப்பினரின் கைகளில் தமிழரசுக் கட்சியின் முக்கிய பொறுப்பு

77 வயது தாண்டுகின்ற வேளையில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை, 33 வயதான நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொன். செல்வராசா கையளித்துச் சென்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சில வருடங்களுக்கு முன் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட சிறப்பு தலைவராக பொன்.செல்வராசாவை நியமித்தார்.

இந்த நிலையில் கட்சியின் மிக முக்கிய பொறுப்பை பொன். செல்வராசா அடுத்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பலர் அவரை அணுகியதை நான் அறிவேன்.

ஆனால் அப்போதெல்லாம் இல்லை நான் அதை பொறுப்பேற்க மாட்டேன், இளவயதினர் இந்த பொறுப்புக்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அதில் மிகவும் உறுதியாக இருந்தவர்.

77 வயது தாண்டுகின்ற வேளையில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை 33 வயதான நாடாளுமன்ற உறுப்பினருக்கு அவர் கையளித்துச் சென்றுள்ளார்.

சொல்லளவில் மாத்திரமல்ல செயலிலும் அதனை செய்து காட்டியிருக்கின்ற ஒரு பெருந்தலைவர்.

தன்னலம் கருதாது கட்சியின் எதிர்கால நன்மையை மனதிலே வைத்து மிகவும் உறுதியோடு யார் எந்த நிர்ப்பந்தத்தை கொடுத்தாலும் தன்னுடைய தீர்மானத்திலே அவர் திடகாத்திரமாக இருந்து செயற்பட்டவர் என குறிப்பிட்டுள்ளார்.