ஒரு தேத்தண்ணிக் கோப்பைக்காக சாந்தனை புறக்கணித்த தமிழ் அரசியல் தலைவர்கள்!!

தமிழ்நாட்டில் பரிதாப மரணமடைந்த சாந்தனுக்கு அஞ்சலிசெலுத்துவதற்கு தமிழ் இனமே திரண்டுவந்து தமது உணர்ச்சிகளைக் கொட்டியிருந்தபோதும், யாழ்ப்பாணத்தில் நடந்த சாந்தனின் இறுதி அஞ்சலியை சில தமிழ் அரசியல் தலைவர்கள் புறக்கணித்தது யாழ் மக்கள் மத்தியில் அதிக கவலையையும் கோபத்தையும் ஏற்படுத்திவருகின்றது.

குறிப்பாக விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன் போன்ற தலைவர்கள் தமிழ் மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது, வேண்டும் என்றே சாந்தனின் இறுதி ஊர்லத்தைப் புற்கணித்ததாக அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட சிலர் தெரிவித்தார்கள்.

’இவர்களின் பிரதான அரசியலே இந்தியாவுக்கு ஏவல்செய்வதுதான். சாந்தனின் இறுதி நிகழ்வுக்கு இவர்கள் வந்து, அது இந்தியாவுக்குத் தெரியவந்துவிட்டால், இவர்களது ஒட்டுமொத்த அரசியலும், தொழில்களும் பாதிக்கப்பட்டுவிடும் என்ற அச்சத்தால்தான் இவர்கள் இங்கு வரவில்லை' என்று தெரிவித்தார் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு இளைப்பாறிய அதிபர்.

"தமிழ் அரசியல்தலைவர்கள் யாழிலுள்ள இந்திய தூதரலாலயத்தில் மாலை நேரங்களில் இலவசமாக அருந்தும் ஒரு தேனீர் கோப்பைக்காக தமிழ் மக்களின் உணர்வுகளை உதாசீனம்செய்துவிட்டார்கள்.." என்று கவலை வெளியிட்டார் சாந்தனின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட ஒரு ஆசிரியர்.

ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் பத்மநாபாவின் படுகொலையில் சாந்தன் சம்பந்தப்பட்டதாலேயே சுரேஷ் பிரேமசந்திரன் சாந்தனின் அஞ்லி நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று அங்கு நின்ற ஒருவரால் காரணம் கூறப்பட்டது.

‘பத்பநாபாவை விடுதலைப் புலிகள் படுகொலைசெய்தது என்று ஈ.பிக்கு நன்றாகவே தெரியும். அதே விடுதலைப் புலிகளின் தலைமைக் காரியாலயத்துக்குச் சென்று அவர்களுடன் உறவாடி, ‘கோழிப்புக்கை’ சாப்பிட்டு, புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தெல்லாம் அரசியல்செய்த சுரேசுக்கு, திடீரன்று தலைவர் பாசம் எங்கிருந்து வந்தது' என்று கேள்வி எழுப்பினார், சாந்தனின் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ளவந்த ஒரு முன்னாள் போராளி.

சிறிதரன், கஜேந்திரகுமார், கஜேந்திரன் போன்ற தலைவர்கள் அங்கு வந்திருந்தவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.