தமிழ் இனப்படுகொலை - ராஜபக்ச குடும்பத்தை சர்வதேச நீதிமன்றில் ஏற்றுவோம் - கனடிய எதிர்க்கட்சித் தலைவர்!

இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களில் ராஜபக்ஸ குடும்ப உறுப்பினர்களும் உள்ளடங்குவர் கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மக்களுக்கான மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் அவர்களுக்குரிய நீதியைப் பெற்றுத் தருவதில் வலிமையான நடவடிக்கைகளை எடுக்க தொடர்ந்து நாங்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம் என கனடாவின் எதிர்க்கட்சித் தலைவர் பியர்ரே பொலிவ்ரெ (Pierre Polievre) தெரிவித்துள்ளார்.

கனடிய நாடாளுமன்றில் இடம்பெற்ற தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு கூறியுள்ளார்.

 தொடர்ந்து உரையாற்றிய அவர்,

"போர்க்குற்றங்களில் ஈடுபட்ட மற்றும் அதை செயல்படுத்தியவர்களுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும், சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர வேண்டும்.

கனடா சில சிறிய இலக்கு பொருளாதாரத் தடைகளை சிறிலங்கா மீது விதித்துள்ளது, ஆனால் அவை போதாது.

தமிழ் இனப்படுகொலையில் ஈடுபட்ட அனைத்து சிறிலங்கா இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் மீதும் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.