அது இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் அல்ல : உண்மையை உடைத்தார் சிவாஜிலிங்கம்

இந்தியாவிற்கு யாராவது ஒருவரை சிறிலங்கா அதிபராக கொண்டுவர வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரல் இருக்குமே தவிர தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் அல்ல என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

செப்டெம்பர் மாதத்திற்குள் அதிபர் தேர்தலை நடத்த வேண்டுமென கூறியிருந்த நிலையில் தமிழர் தரப்பைச் சார்ந்த குத்துவிளக்கு கூட்டணியினர் முன்வைத்த பொது தமிழ் வேட்பாளர் ஒருவரை அதிபர் தேர்தலில் நிறுத்தப்பட வேண்டும் என்ற கருத்து தொடர்பில் வினவிய போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

“இதுவரை 8 அதிபர் தேர்தல்களை நாடு சந்தித்து விட்டது. இனிவரப் போகின்ற தேர்தல் 9ஆவது தேர்தல்.

இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வில் 1982ஆம் ஆண்டு தொடக்கம் நாங்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றோம்.

இக்காலப்பகுதியில் ஜே.ஆர் ஜெயவர்தன தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்குறுதிகளை வழங்கினார். தேர்தலைப் புறக்கணிப்பது போல் செயற்பட்டமை மறைமுகமாக ஜே.ஆரின் வெற்றிக்கு உதவியது.

இந்த தேர்தலிலும் கூட நாங்கள் ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பாகச் சொல்லாவிட்டால் எமது பிரச்சினைக்கு இலங்கைக்குள் தீர்வில்லை வேறொரு விடயத்தை நோக்கிப்போகின்றோம்.

எங்களுடைய ஆதரவை வழங்கி சிங்களவர்கள் அதிபராக வர விரும்பவில்லை என்பதை உரக்கச் சொல்கின்ற செய்தியாக தமிழ் பொது வேட்பாளர் என்ற கருத்து இருக்கும் என்பதுடன் அதற்கு 100 வீதமான சாத்தியமில்லை என்பதை நம்புகின்றேன்.

2010 இல் மகிந்த ராஜபக்சவை அதிபராக்க வேண்டுமென்பதற்காகவே நான் சென்னை விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தப்பட்டேன். அப்பொழுது நான் அதிபர் வேட்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர், இராஜதந்திர கடவுச்சீட்டு வைத்திருந்தவர்.

இதேவேளை இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து தான் மகிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பி வைத்தன.

மீண்டும் ரணில் விக்ரமசிங்க அதிபராக வருவதற்கான வாய்ப்புக்கள் எவ்வளவு என்று சொல்ல முடியாது. ஆனால் அவர் கடுமையான பகீரதப் பிரயத்தனம் செய்கின்றார். அதில் ஒன்றே அவருடைய வடக்கிற்கான விஜயம்.

ரணிலின் வடக்கு விஜயத்தினால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அவர் தன்னுடைய நிகழ்ச்சி நிரலின் படியே வடக்கிற்கு சென்றார்.” எனத் தெரிவித்தார்.