துவாரகா தலைமையில் தமிழீழ அரசியல் போர்..!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும்,நலமுடன் இருப்பதாக உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு சென்ற பிரபாகரனின் மனைவி மதிவதினி மற்றும் மகள் துவாரகா ஆகியோர் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர் என நெடுமாறனின் அறிவிப்பை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் தெரிவித்து வருகின்றன.

இந்த தகவல்களை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தந்தை பெரியார் திக.பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன், பிரபாகரன் மகள் துவாரகா தலைமையில் தமிழீழ விடுதலைக்காக ஆயுதப்போராட்டமாக இல்லாமல் ஒரு அரசியல் போராட்டம் தொடங்கப்படலாம். அதை மத்திய பாஜக அரசு ஆதரிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்தினரின் அனுமதி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் உயிரோடு இருக்கின்றார் என கடந்த 14 ஆண்டுகளாக பல்வேறு சந்தரப்பங்களில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும், மூத்த தலைவர்களில் ஒருவருமான பழ.நெடுமாறன் கூறி வந்த நிலையில் இம்முறை, பிரபாகரனின் குடும்பத்தின் அனுமதியுடன் அவர் உயிருடன் இருப்பதாக அறிவிக்கின்றேன் என பழ.நெடுமாறன் அறிவிப்பினை வெளியிட்டிருந்தார்.

இதேவேளை, பழ.நெடுமாறனின் இந்த அறிவிப்பை இலங்கை இராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், அரசியல் தலைவர்களும் மாறுபட்ட தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரோடு இருந்த பாதுகாவலர்கள் பலரும் பல்வேறு முக்கிய தகவல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில்,பிரபாகரனின் மனைவி மதிவதினி, பிரபாகரன் மகள் துவாரகா ஆகியோர் ஜெர்மனி அல்லது வேறு ஒரு நாட்டில் உயிருடன் இருக்கின்றனர் என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் பிரபாகரன் மனைவி மதிவதினி, மகள் துவாரகா ஆகியோரிடம் நெடுமாறன் பேசியுள்ளதாகவும், ஆனால் கனடா மற்றும் வேறு சில நாடுகளில் உள்ள பிரபாகரனின் சகோதரி, சகோதரர்கள் இந்த அறிவிப்பை வெளியிட வேண்டாம் என தடுத்தனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.