தமிழீழ விடுதலை ஒன்றே ஈழத்தமிழரின் கனவு! நிமால் விநாயகமூர்த்தி

தமிழீழ விடுதலை ஒன்றே தமிழரின் கனவு என நாடு கடந்த தமிழீழ உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசின் வருடாந்த ஒன்று கூடல் Award ceremony - 2023 நிகழ்வு, நேற்று கனடாவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது, இலங்கைத் தீவில் எமது தமிழீழ மக்கள் விடுதலைக்கும் உரிமைக்கும் சுதந்திரத்திற்குமான வேள்விப் போராட்டத்தை ஒரு வாழ்வென வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

முழுக்க முழுக்க இராணுவத்தால் சூழப்பட்ட தமிழீழத்தில், முழுக்க முழுக்க இராணுவ முகாங்களால் சூழப்பட்ட தமிழீழத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட, அடிமைகொள்ளப்பட்ட தேச மக்களாக எமது மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையிலும் தான் தங்கள் வாழ்வை ஒரு போராட்டமாக அவர்கள் மேற்கொள்ளுகிறார்கள்.

எனவே தமிழீழ விடுதலை ஒன்றுதான் எங்கள் மக்களின் தீர்வாகவும் தேவையாகவும் தமிழீழத்தின் விடியலாகவும் இருக்கிறது. கடந்த நவம்பர் 27 – மாவீரர் தினத்தின் வாயிலாக தமிழீழ மக்கள் பெரும் செய்தி ஒன்றை நிலத்தில் இருந்து சிங்கள தேசத்திற்கும் இந்த உலகத்திற்கும் சொல்லியுள்ளனர்.

சிறிலங்கா அரசின் கடுமையான அச்சுறுத்தல்கள், தடைவிதிப்புக்கள், அனுமதி மறுப்புக்கள், இராணுவ ஆக்கிரமிப்பின் அச்சுறுத்தல்கள் தாண்டி எமது மக்கள் மாவீரர் தினத்தை தமிழீழ காலத்தைப் போல அனுஷ்டித்துள்ளனர்.

துயிலும் இல்லங்கள் மீது அடாவடி, மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுக்கள் மீது விசாரணை அச்சுறுத்தல் என பல வடிவங்களில் அடக்குமுறை நிகழ்த்தப்பட்ட போதும் மாவீரர் தினத்தை முன்னெடுப்பதில் தமிழீழ மக்கள் காட்டியுள்ள உறுதி என்பது விடுதலை மீதான பெரு விருப்பும் தமிழீழ தேசம் மீதான பெரும் தாக வெளிப்பாடுமாகும் என்பதை உங்களுக்கு நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

கடந்த காலத்தில் எங்கள் மண் மிகப் பெரிய இனப்படுகொலையைச் சந்தித்து. இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் இனப்படுகொலை என்று சொல்லப்படுகிற இனப்படுகொலையை முள்ளிவாய்க்காலில் தமிழீழ இனம் சந்தித்திருக்கிறது.

அந்தக் காயங்களில் இருந்து எங்கள் மக்கள் இன்னமும் மீண்டெழவில்லை. அங்கங்களை இழந்து, உறவுகளை இழந்து, இனப்படுகொலைப் போருக்கு இனத்தை பலிகொடுத்ததவர்களாக எங்கள் மக்கள் நிற்கிறார்கள்.

அத்துடன் இனப்படுகொலைப் போர்க்களத்தில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்களையும் சரணடைந்து கையளிக்கப்பட்டவர்களையும் தேடுகின்ற மனிதர்களால் தான் எங்கள் தமிழீழ தேசம் இன்று அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறது.

இவ்வளவுக்கும் காரணமாக இனப்படுகொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் அதன் வழியாக தமிழீழத்தில் நிரந்தர அமைதித் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதையும் தான் எங்கள் மக்கள் களத்தில் இருந்து தொடர்ந்து பல வகையிலும் வலியுறுத்தி வருகிறார்கள்.

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடாத்த வேண்டும் என்பதையும் இனப்படுகொலையாளிகள் அதன் ஊடாகவே தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் எமது மக்கள் கோரி நிற்கிறார்கள்.

ஆனால் சிறிலங்கா அரசோ தானே இனப்படுகொலைக்கு விசாரணை நடத்தப் போவதாக சொல்லிச் சொல்லியே இன்றைக்கு 15 ஆண்டுகளைக் கடத்தியுள்ளது.

இனப்படுகொலைக்கான நீதிக்காக புலம் விரைந்தும் வெகுண்டும் மிக அதிகமாகவும் போராட வேண்டும் அல்லது செயற்பட வேண்டும் என்று களம் எதிர்பார்க்கின்றது.

களத்தில் குரலை புலம் என்றும் மிக நெருக்கமாக உணர்ந்து செயலாற்றி வருகின்ற நிலையில், நாம் பெரும் கடமைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம்.

உலக அனுபவங்களில் இருந்து இனப்படுகொலைக்கான நீதியைப் பெறுவதும் தமிழரின் சுயநிர்யண தேச ஆட்சியைப் பெறுவதும் இன்று நம் முன்னால் உள்ள பெரும் கடமைகள் என்பதை இங்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து எமது மக்கள் பெரும் நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர். தங்களுக்கான உரிமையைப் பெற்றுத் தருவதிலும், தங்களுக்கான விடியலைப் பெற்றுத் தருவதிலும், தங்களுக்கான தேசத்தை அமைத்துத் தருவதிலும் நாடு கடந்து தமிழீழ அரசாங்கம் மிக எத்வேகமாக பயணிக்கிறது அல்லது பயணிக்க வேண்டும் என்கிற நம்பிக்கையில்தான் தமிழீழ மண்ணும் மக்களும் இருக்கிறார்கள் என்பதை நான் இந்த இடத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

எமது மக்களின் அந்த நம்பிக்கையை, தாகத்தை நாங்கள் புலத்தில் வலுவுள்ள பலமுள்ள ஒன்றுபட்ட சக்தியாக நின்று நிலைத்து நனவாக்க வேண்டும் என்பதையும் அழுத்தமாக இவ்விடத்தே வலியுறுத்த விரும்புகிறேன். என்று அவர் தெரிவித்தார்.