உக்ரைன் போரில் 'மாஸ்' காட்டும் தமிழன்


உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உக்ரைன் இராணுவத்தினருக்கு உதவியாக போரில் பங்கேற்றிருப்பது மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

தன்னை வாழ வைத்து உணவு அளித்த ஒரு நாடு பிரச்சினையில் சிக்கியிருக்கும் போது, அதை அப்படியே கைவிட்டு வருவது சரியாக இருக்காது என்கிறார் அந்த தமிழன். 

உக்ரைனில் இருந்து வெளியேறுவதற்கு பல வாய்ப்புகள் இருந்தும், அவற்றை பயன்படுத்தாமல் மிக ஆபத்தான சூழ்நிலையிலும் அந்நாட்டு இராணுவத்தினருக்கு உதவி வருபவர் தான் சென்னையை அடுத்த சிறிபெரும்புதூரைச் சேர்ந்தவர் பாலா சங்கர்.

2013ஆம் ஆண்டு உக்ரைனில் உள்ள கார்கிவ் நகருக்கு மருத்துவம் கற்கச்சென்ற அவர் பின் அங்கேயே தங்கிவிட்டார்.

தனது சகோதரர்களையும், மனைவி, குழந்தைகளையும் மட்டும் தாய்நாட்டுக்கு அனுப்பிவிட்டு தற்போது, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணித்து உக்ரைன் நாட்டுக்கு தேவையான ஆயுதங்களை வாங்கி கொடுத்து வருகிறார்.

இவ்வாறான சூழலில் இந்தியா செல்லமறுக்கும் அவர் கூறியதாவது, “இந்தியா எனது தாய்நாடு. அதே சமயத்தில், என்னை வாழ வைத்த நாடு உக்ரைன். எனக்கும், என் மனைவி, மகனுக்கும் உணவு கொடுத்த நாடு உக்ரைன்.

அப்படி இருக்கும்போது, அந்த நாட்டுக்கு ஒரு பிரச்சினை என்றால் எப்படி என்னால் அப்படியே விட்டுவிட்டு வர முடியும்?

எனது குடும்பத்தை பாதுகாப்பாக அனுப்பிவிட்டேன். நான் உக்ரைனை விட்டுச் செல்ல மாட்டேன். கடைசி மூச்சு இருக்கும் வரை உக்ரைனுக்காக போராடுவேன்.

தினம் தினம் மரணத்தை நேரில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். பல ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பியுள்ளேன். ஏவுகணைகளை விட ரஷ்ய உளவாளிகள் ஆபத்தானவர்கள்.

அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டுத்தான் ஆயுதங்களை எடுத்து வருகிறேன். உயிர் எப்போது போகும் எனத் தெரியவில்லை. அதைப் பற்றிய பயமும் இல்லை” எனக் கூறியுள்ளார்.