கெய்ரோவில் இஸ்ரேல் இன்றி பேச்சுவார்த்தை : அவசர போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா அழைப்பு

காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடிக்கும் நிலையில், அதன் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் ரமலான் மாதத்திற்கு முன்னர் போர் நிறுத்தம் ஒன்றை எட்டும் முயற்சியில் அமெரிக்கா உட்பட மத்தியஸ்த நாடுகள் ஈடுபட்டு வரும் சூழலிலேயே அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

ஐந்து மாதங்களை எட்டும் இந்தப் போரை நிறுத்தும் முன்வொழிவு தொடர்பில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் எகிப்து, அமெரிக்கா மற்றும் கட்டார் மத்தியஸ்தர்கள் அதேபோன்று ஹமாஸ் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் காசாவுக்கு உதவிகளை வழங்குவது மற்றும் பலஸ்தீன கைதிகளுக்கு இணையாக பணயக்கைதிகளை விடுவிப்பது ஆகியவை உள்ளடங்கிய பரந்த அளவில் நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்றிருப்பதாக அமெரிக்க சிரேஸ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் காசாவில் இருந்து இஸ்ரேலிய படை முழுமையாக வாபஸ் பெற ஹமாஸ் வலியுறுத்துவது உட்பட சில விடயங்களில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

‘போர் நிறுத்தம் ஒன்றை ஹமாஸ் கோருகிறது. எனவே, உடன்படிக்கை ஒன்று வைக்கப்பட்டுள்ளது’ என்று அலபாமாவில் ஞாயிறன்று (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று பேசிய ஹரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கத்துக்கு மாறான தொணியில் பேசிய அமெரிக்க துணை ஜனாதிபதி, காசாவுக்கு உதவிகளை கணிசமாக அதிகரிக்க இஸ்ரேல் மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். காசாவில் மக்கள் பட்டினியில் இருப்பதாகவும் நிலைமை ‘மனிதாபிமானமற்ற’ வகையில் உள்ளது என்றும் அவர் வர்ணித்தார்.

‘காசாவில் பாரிய அளவான வேதனைகள் இடம்பெற்று வரும் நிலையில் அவசர போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட வேண்டும்’ என்றார்.

இதேநேரம் காசாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளில் தொடர்ந்தும் உயிருடன் இருப்பவர்களின் பட்டியலை வெளிடும்படி விடுத்த கோரிக்கையை ஹமாஸ் அமைப்பு நிராகரித்ததை அடுத்து கெய்ரோவில் இடம்பெற்று வரும் காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தையை இஸ்ரேல் புறக்கணித்ததாக இஸ்ரேலிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும் இஸ்ரேல் தொடர்ந்து குண்டு வீசுவதால் அந்த விபரத்தை தர முடியாதிருப்பதாக ஹமாஸ் அமைப்பு கூறியதாக பி.பி.சி. தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.