சுவீடனின் கிருனா நகரில் அமைந்துள்ள 113 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை வேறு இடம் ஒன்றிற்கு மாற்றுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
உருளும் மேடையின் மீது தேவாலயம் தூக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த மேடை மணித்தியாலத்திற்கு 500 மீட்டர் வேகத்தில் நகர்கிறது. இதனை பார்வையிட பெரும்திரளான மக்கள் அங்கு கூடி வருவதாகவும் சுவிடன் ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
ஆண்டின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்ட பகுதியில் இந்த தேவாலயம் தற்போது அமைந்துள்ளது.
தற்போதுள்ள இடத்திலிருந்து குறித்த தேவாலயம் 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்திற்கு மாற்றப்படவுள்ளதோடு, அதற்கு இரண்டு நாட்கள் வரை செல்லும் என குறிப்பிடப்படுகின்றது.
தேவாலயம். நூற்றாண்டு பழமையான எஃகுச் சுரங்கம் அருகே இருக்கும் பகுதியில் பிளவுகள் ஏற்பட்டதால் தேவாலயம் தொடர்ந்து அங்கிருப்பது பாதுகாப்பல்ல என்று முடிவெடுக்கப்பட்டது.
பல தசாப்தங்களாக இப்பகுதியில் இரும்புத் தாது வெட்டியெடுப்பு காரணமாக தரை நிலையற்றதாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த தேவாலய இடமாற்றம் ஒரு பொறியியல் சாதனையாகக் கருதப்படுகிறது.
உள்ளூர் மக்கள் மத்தியில் இந்த தேவாலயம் முக்கியமான இடம் பிடித்திருப்பதால் வரலாற்று சிறப்பு மிக்க குறித்த தேவாலயத்தை அவர்கள் தொடர்ந்தும் பாதுகாப்பாக பேணுவதற்கு அவர்கள் விரும்புகிறார்கள்.
1950 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட கிருனா தேவாலாயம் 35 மீட்டர் உயரமும் 40 மீட்டர் அகலமும், 672 தொன் எடையும் கொண்டதாகும்.
இதனிடையே சுவீடனின் தொலைக்காட்சிகள் தேவாலயம் இடம் மாற்றப்படுவதை நேரடியாக ஒளிபரப்பு செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.