தமிழரசுக்கட்சியின் தேசியபட்டியல் ஆசனத்தை ப.சத்தியலிங்கத்திற்கு வழங்கியதன் மூலம் எம்.ஏ.சுமந்திரன் அடுத்து வருங்காலப்பகுதிகளில் ஆசனத்தை தனதாக்கிக்கொள்ள திட்டமிடுவதாக சர்ச்சைகள் வலுத்துள்ளது.
எம்.ஏ.சுமந்திரன் தரப்பின் ஆதரவாளராக ப.சத்தியலிங்கம் கருதப்படுகின்றமையும், இது சுமந்திரனின் தந்திர அரசியல் எனவும், விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
தமிழரசுக்கட்சிக்கு கிடைத்துள்ள ஒரு ஆசனத்திற்கான விவாதங்கள் தற்போதுவரை நீளுகிறது.
இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தினை சுமந்திரனுக்கு வழங்குவது பொருத்தமானதாக இருக்கும் என்று புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டோர் தெரிவித்தாலும், அதற்கு இதுவரையில் கட்சி சார்பில் எதுவித ஆதரவுகளும் வெளிவரவில்லை.
இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு வடக்கு, கிழக்கில் ஏழு ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.
அத்துடன் தேசியப் பட்டியல் ஆசனமொன்றும் கிடைத்துள்ளது. குறித்த தேசியப் பட்டியல் ஆசனத்தினை ப.சத்தியலிங்கத்திற்கு வழங்க கட்சி முன்வந்துள்ளது.
அதேவேளை, தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவராக சிவஞானம் சிறிதரன் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், கட்சியின் பேச்சாளர் பதவி தொடர்பாக நாடாளுமன்ற முதலாவது அமர்வின் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
தென்னிலங்கை மட்டுமல்லாது வடக்கு கிழக்கிலும், தேசிய மக்கள் சக்தியின் பலத்த வெற்றி சர்வதேச அளவில் தற்போதும் பேசப்பட்டு வருகிறது.
அது ஒரு புறம் இருக்க, தென்னிலங்கை அரசியலில் பேசுபொருளாகிய மற்றுமொரு விடயமென்றால், அது எம்.ஏ சுமந்திரனின் தோல்வி.
நாடாளுமன்ற தேர்தல் மாத்திரமல்லாது, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இடம்பெற்ற பல்வேறு ஊடக சந்திப்புகளிளும், பிரசார மேடைகளிளும் தமிழரசுக்கட்சியே வடக்கின் அடையாளம், அதற்கே மக்களின் ஆரதவு தொடரும் என பகிரங்க கருத்துக்களை சுமந்திரன் முன்வைத்திருந்தார்.
எனினும், ஜனாதிபதி தேர்தலில் சுமந்திரன் ஆதரவு தரப்பும், சங்கு சின்னத்தின் எழுச்சியும் வெளிப்பட்டிருந்த நிலையில், அது பொது தேர்தலில் முற்று முழுதாக வீழ்ச்சி கண்டிருந்தது.
தமிழ்க் கட்சிகளுக்கு வேறு விடயங்களில் ஒற்றுமை இல்லாவிட்டாலும் சுமந்திரனுக்கு எதிரான நிலைப்பாட்டில் அவை ஒருமித்துநிற்கின்ற நிலை வெளிப்படுகிறது.
தற்போகு அக்கட்சி சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள சி. சிறீதரன் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செய்தியில், “ தமிழரசுக் கட்சிக்கு பாடம் புகட்ட நினைத்த மக்களின் வெளிப்பாடே இந்த தேர்தல் முடிவு’’ என சுட்டிக்காட்டினார்.
மேலும் சில தமிழ் அரசியல்வாதிகள் தனது வெற்றிக்கு அப்பாற்பட்டு சுமந்திரனின் தோல்வியை மையப்படுத்தியே பிரசாரம் செய்ததாக ஒரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இவ்வாறு இருக்கையில், சுமந்திரனின் வழிநடத்துதலில்தான் சத்தியலிங்கம் செயற்படுகின்றார் என சமூகவியலாளர்களும் கூறிவருகின்றனர்.
இது இவ்வாறு இருக்கையில், தற்போது எழுந்துள்ள கேள்வி என்னவென்னறால் சுமந்திரன் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திற்கு நுழைவாராக இருந்தால், சத்தியலிங்கம் அதற்கான வாய்ப்பை வழங்குவாரா?
இல்லையென்றால் சுமந்திரன் முன்னதாக கூறியதை போல தேசிய பட்டியலும் தேவையில்லை என அரசியலில் தொடருவாரா?
மீள்பரிசீலனை என்ற வாசகத்தை தமிழரசுக்கட்சி அடிக்கடி கட்சி விவகாரங்கள் தொடர்பான சமூகத்தின் கேள்விக்கு பதிலாக்கியுள்ளது.
அது போல தேசிய பட்டியல் பெயரையும் மீள்பரிசீலனை செய்யுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்...