காணொளி ஆதாரத்துடன் சிக்கிய மாணவர்கள் : தென்கிழக்கு பல்கலைகழகத்தில் 22 பேருக்கு வகுப்பு தடை



தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிப்பதற்கு பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
 

பகிடிவதை செய்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
 

புதிய மாணவ குழுவிற்கு கொடூரமாக பகிடிவதை செய்த வீடியோ சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.
 

இந்த விடயம் தொடர்பான ஆரம்ப விசாரணைகளை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மூன்றாம் மற்றும் இரண்டாம் ஆண்டு பொறியியல் பீடங்களைச் சேர்ந்த 22 மாணவர்களுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

பகிடிவதை செய்த சம்பவம் குறித்து பொலிஸாரும் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 

இதற்கிடையில் பகிடிவதை உள்ளிட்ட அனைத்து வகையான துன்புறுத்தல்களையும் தடுப்பதற்காக, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவவால் செயலணி ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
 

கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரினி அமரசூரியவின் ஆலோசனைப்படி இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.
 

பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய உயர் கல்வி நிறுவனங்களில் நிலவும் பகிடிவதை முற்றாக ஒழிப்பது தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாக உள்ளதால், பகிடிவதை மட்டுமல்லாமல், மாணவ மாணவிகளால், நிர்வாகம் அல்லது வேறு தரப்பினரால் ஏற்படும் அனைத்து வகையான துன்புறுத்தல்களுடன், அந்தத் தரப்பினரால் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களை நிறுத்துவதும் இந்த செலணியின் நோக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.