இ.போ.ச பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல் - தனியார் பஸ் சாரதி உட்பட 7 பேர் அதிரடிக் கைது


 இலங்கை போக்குவரத்து சபையின் சிலாபம் சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துநர் உட்பட ஏழு பேர் ஆனமடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பத்துளுஓயா, கிரியங்கள்ளிய, பங்கதெனிய மற்றும் வென்னப்புவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 25 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்

புத்தளம், ஆனமடுவ பகுதியில் இருந்து மஹரகம அபேக்‌ஷா வைத்தியசாலைக்கு செல்லும்  இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் மீதே ஆன்டிகம பகுதியில் வைத்து இவ்வாறு கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சபையின்  சிலாபம் சாலைக்கு சொந்தமான குறித்த பஸ் சில வருடங்கு முன்பிருந்து புத்தளம் ஆனமடுவ நகரில் இருந்து மஹரகம அபேக்‌ஷா வைத்தியசாலை வரை தொடர்ச்சியாக சேவையை மேற்கொண்டு வருகின்றது.

இதனால், புத்தளத்தில் இருந்து நாளாந்தம் பெரும் அளவிலான மக்கள் மஹரகம அபேக்‌ஷா வைத்தியசாலையில் தமது மருத்து தேவைகளை எவ்விதமான சிரமங்களுமின்றி நிறைவேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.