கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல் நிலவுகின்றது.
பொலிஸார் மீது பொதுமக்கள் கற்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், அவர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் அளித்ததாகக் கூறப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட கஹவத்தையைச் சேர்ந்த இளைஞரின் இறுதிச் சடங்கு நேற்று மதியம் இடம்பெற்றது.
22 வயதுடைய இமாந்த சுரஞ்சன் என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், நேற்றையயதினம் குறித்த இளைஞனின் இறுதிச் சடங்கின் பின்னர் பொலிஸாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த கிராமத்தில், பாதுகாப்பு காரணங்களின் பொருட்டு சுமார் 150 பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இதன்போது, கொலை செய்யப்பட்ட இளைஞரின் உறவினர்கள் மற்றும் கிராமவாசிகள் இணைந்து இளைஞனின் மரணத்திற்கு பொலிஸாரும் பொறுப்பு என்று கூறி அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
எனவே கிராம மக்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தியுள்ளதுடன், இதில் சிலர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 30ஆம் திகதி இரவு, கஹவத்தை பகுதியில் உள்ள வீடொன்றுக்குச் சென்ற குழுவினர் இரு இளைஞர்களை அழைத்துச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.
அதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இளைஞன் போதைப் பொருள் கடத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.