வாகனங்கள் இறக்குமதி தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு!



தற்போது நிலவும் பொருளாதார சூழ்நிலையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சுமார் 900 பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் அரசாங்கம் கடுமையான நிபந்தனைகளின் கீழ் பொருளாதாரத்தை நிர்வகித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

இந்தநிலையில், நாட்டின் தற்போதைய நிலைமையை ஆராய்ந்த பின்னரே வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கமுடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் கொள்வனவுக்காக 80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்ட பின்னரும், அது அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, அதிக அளவு டொலர்களை உள்ளடக்கிய வாகன இறக்குமதி போன்ற முடிவுகள் கடுமையான ஆய்வுகளுக்கு பின்னரே எடுக்கப்பட வேண்டும்.

எனவே, இந்த நேரத்தில், அதிக அளவு அன்னிய நாணயக் கையிருப்பு ஒதுக்கப்பட வேண்டியிருப்பதைக் கருத்தில் கொண்டு வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மத்திய வங்கியிடமிருந்து சுமார் 75 முதல் 80 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், டொலரில் முதலீடு செய்யும் தரப்புகள், டொலர் உயரும் என்று எதிர்பார்த்து அவற்றை கொள்வனவு செய்தன. இதன் காரணமாகவே தற்போதைய நிலை ஏற்பட்டது.

எனவே இது ஒரு சாதாரண நிலைமையே என அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.