காசாவில் பட்டினிச் சாவும் அதிகரிப்பு - 32 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு



காசாவில் கடுமையான பட்டினி காரணமாக உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கும் சூழலில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 32 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்தப் போரில் இஸ்ரேலின் கட்டுப்பாட்டுக்கு மத்தியில் காசாவில் உணவு, நீர், எரிபொருள் மற்றும் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது.


இந்நிலையில் காசாவுக்கு குறிப்பிடத்தக்க உணவுகள் செல்ல அனுமதிக்கப்படாத பட்சத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான பட்டினியால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனொம் குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் கடும் பட்டினியால் உயிரிழக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குறிப்பிட்டிருக்கும் அந்த அமைப்பு, பிறந்த குழந்தைகள் எடை குறைவு காரணமாக உயிரிழப்பதாகவும் சுட்டிக்காட்டியது.


காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் 27 பேர் உயிரிழந்திருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு கடைசியாக வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

காசாவுக்கு பல நாடுகள் வான் வழியாக உதவி செய்து வருகின்றன. மேலும் தொண்டு நிறுவனம் ஒன்று கடல் மார்க்கமாக விநியோகப் பாதை ஒன்றை ஆரம்பித்தபோதும் தரை வழியாக உதவிகள் செல்வது தொடர்ந்து கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறான உதவி விநியோகங்களே செயல்திறன் மிக்கது என தொண்டு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

இதில் உதவிகள் அதிகரிக்கப்படாத பட்சத்தில் வடக்கு காசாவில் உள்ள 300,000 மக்கள் மே மாதத்தில் பஞ்சத்தை எதிர்கொள்வார்கள் என்று ஐ.நா ஆதரவு பெற்ற புதிய அறிக்கை ஒன்று மதிப்பிட்டுள்ளது.

இஸ்ரேல் உதவிகளை முடக்கி இருப்பதாகவும் இது பட்டினியை போர் முறையாக பயன்படுத்துவதற்கு சமமானது என்றும் மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் வோல்கர் துர்க் நேற்று முன்தினம் (19) குறிப்பிட்டிருந்தார்.