ஆபத்தான நிலையில் இலங்கையர்கள்..! : துப்பாக்கி சூட்டு பின்னணியில் மர்ம நபர்கள்

இனந்தெரியாத சந்தேக நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன. இவை நாட்டில் ஒவ்வொரு பிரஜைகளும் சுதந்திரமாக உயிர் வாழ்வதற்கான உரிமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளன. எனவே பாதுகாப்பு படைகளின் ஊடாக மக்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் சரிவர நிறைவேற்ற வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரித ஹேரத் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர்

 அரசியல் செயற்பாட்டாளரான டான் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஒவ்வொரு நபர்கள் கொண்டுள்ள அரசியல் நிலைப்பாடுகளுடன் ஏனையோர் இணங்குவதில்லை. அந்த வகையில் டான் பிரயசாத்தின் அரசியல் நிலைப்பாட்டுடன் எமக்கு உடன்பாடு இல்லை.

எவ்வாறிருப்பினும் நாட்டிலுள்ள எந்தவொரு பிரஜையும் எந்தவொரு அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் அவருக்கு உயிர் வாழ்வதற்கான உரிமை இருக்கிறது.
நாட்டு பிரஜைகளின் உயிர் வாழும் உரிமையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் அடிப்படை பொறுப்பாகும். தம்மை தெரிவு செய்த குழுக்களை மாத்திரமே நாம் பாதுகாப்போம் என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் கொண்டிருக்குமாயின் அது தவறாகும்.

ஆயுத பலம் நாட்டின் பாதுகாப்பு படைகளுக்கு மாத்திரமே வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் பாதுகாப்பு படைகளின் ஊடாக மக்களின் உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பை அரசாங்கம் சரிவர நிறைவேற்ற வேண்டும்.
அதனை விடுத்து மக்கள் வீதியில் செல்வதற்கு கூட அச்சப்படும் சூழல் உருவாகுவதற்கு இடமளிக்கப்படக் கூடாது. எமது நாடு இதற்கு முன்னர் இவ்வாறான பல்வேறு சூழ்நிலைகளை எதிர்கொண்டிருக்கிறது.

அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கத்தால் இந்த பொறுப்பை தட்டிக்கழிக்க முடியாது. எனவே நாட்டில் தொடர்ச்சியாக பதிவாகிக் கொண்டிருக்கும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பரந்தளவில் விசாரணைகளை முன்னெடுத்து உண்மைகளை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.