உள்ளாடைக்குள் பாம்புகளை வைத்து கடத்திய இலங்கையர் : அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள்

தாய்லாந்து பெங்கொக் சுவர்ணபூமி விமான நிலையத்தில், மூன்று பைதன் வகை பாம்புகளை தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தாய்லாந்து வனவிலங்கு குற்ற புலனாய்வு மைய பணிப்பாளர் பொலவீ புசாக்கியாட, “சீஹான்” என்ற பெயரில் உள்ள இலங்கை நபர், கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 12.06 மணிக்கு தாய் எயர்வேஸ் விமானத்தில் பெங்கொக் வந்தார்.

இந்த நபர் கடந்த காலங்களில் பல்வேறு விலங்குகளை, ஓநாய்கள், பறவைகள், தவளைகள், ஆமைகள் உள்ளிட்டவற்றை கடத்தியதாக பதிவு உள்ளது. 2024ஆம் ஆண்டு கொழும்பில் இவர் விலங்கு கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டும் இருந்தார்.

அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், தாய்லாந்து வனவிலங்கு பாதுகாப்பு பிரிவுகள் மற்றும் சுங்கத் துறை உட்பட பல அமைப்புகள் இணைந்து அவரை கண்காணித்து வந்தன.


புதன்கிழமை மாலை, இவர் ஒரு வாடகை வாகனம் ஒன்றில் விமான நிலையம் வந்ததும், வழக்கமான சோதனைக்கு பிறகு, சந்தேகத்தின் அடிப்படையில் அவரது உடலில் தனிப்பட்ட சோதனை நடத்தப்பட்டது.


அப்போது மூன்று பால் பைதன் வகை பாம்புகள் அவரது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பாம்புகள், சர்வதேச பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டவை. இவைகளை ஏற்றுமதி செய்ய இறக்குமதி வரி அனுமதி கட்டாயமாக தேவைப்படும்.

இதனையடுத்து, சீஹானுக்கு எதிராக தாய்லாந்து வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மற்றும் சுங்கச் சட்டங்கள் உட்பட பல பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்கிறது.” என தெரிவித்துள்ளார்.