இந்தியாவின் அதிருப்தியை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் - உறவு சிதையும் அபாயம்

 

இலங்கைக்குள் சீன உளவுக் கப்பலை அனுமதிப்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தல் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இந்திய ராஜ்ய சபாவில் நேற்று உரையாற்றிய போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சீனாவின் குறித்த உளவுக் கப்பலானது எதிர்வரும் 11 ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வரவுள்ள நிலையில் ராஜ்ய சபாவிலும் இந்த விடயம் எதிரொலித்துள்ளது.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“இலங்கைக்கு சீன உளவுக் கப்பல் வருகை தருகிறது என ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை அந்நாட்டு அரசு முதலில் மறுத்தது. இதனால் சர்வதேச அளவில் மிகப் பெரும் சர்ச்சை வெடித்தது.

இதனையடுத்து இலங்கை அரசானது, சீனாவின் ஆராய்ச்சி கப்பல்தான் இலங்கைக்கு வருகிறது. அனுமதி அளித்துள்ளோம் எனக் கூறியது.

இலங்கைக்குள் சீனாவின் கப்பலை அனுமதிக்கக் கூடாது என்பதில் இந்தியா உறுதியாக இருந்து வருகிறது. ஆரம்பம் முதலே இலங்கை அரசின் நிலைப்பாட்டுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இலங்கைக்குள் சீன கப்பலை அனுமதிக்க கூடாது என ஈழத் தமிழ் தலைவர்கள், மலையக அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்தியாவின் அதிருப்தியை எதிர்கொள்ள நேரிடும் என்பதும் அவர்களது எச்சரிக்கை.

இலங்கையின் அம்பந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் உளவுக் கப்பலுக்கு அந்நாட்டு அரசு அனுமதி கொடுத்துள்ளது. சீனாவின் உளவுக் கப்பல் இந்தியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளை எளிதாக உளவு பார்க்க இது வகை செய்யும்” என அவர் சுட்டிக்காட்டினார்.