புதிய இணைப்பு
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக யாழ். குடா நாட்டில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 20 வீடுகள் சேதமடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட அனத்த முகமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதன்போது, தென்மராட்சி பிரதேசத்தில் 13 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் மழை வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், தென்மராட்சி பிரதேசத்தின் நாவற்குழி மற்றும் கொடிகாமம் பிரதேச குடியிருப்புகளுள் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் நாவற்குழி அன்னை சனசமூக நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முதலாம் இணைப்பு
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் ஏனைய அனர்த்தங்களால் 610 குடும்பங்களை சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் 20 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனைத்து முக அமைத்துவ பிரிவின் பிரதிபலிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, மேல், சப்ரகமுவ மற்றும் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
முன்னெச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.