தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் நீங்களா.. இன்னொரு நாட்டின் விடுதலை பேசுவது..! சித்தார்த்தன் விளாசல்

 சிறிலங்காவில் தமிழ் மக்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக வைத்துக் கொண்டு, பலஸ்தீனத்தின் விடுதலை பற்றியா கதைக்கின்றீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அரசாங்கத்தை கடுமையைாக சாடியுள்ளார்.

நேற்று(18) சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பலஸ்தீனத்தின் விடுதலை தொடர்பான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மேலும் தெரிவிக்கையில்,

''எங்களுடைய நாடாளுமன்றத்தில் பலஸ்தீனர்களுக்காக கதைக்கின்றார்கள், நல்லது வரவேற்கின்றோம். அது கதைக்கப்பட வேண்டிய விடயம் என்பதையும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் தமிழ் மக்களுடைய நியாயமான பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்பதில் எங்களுடைய அரசாங்கத்திற்கு அக்கறையில்லை.

நான் ஏன் இதைக் கூறுகின்றேன் என்றால், நீங்கள் உங்கள் நாட்டிலே இருக்கக்கூடிய இன்னொரு இனத்தை அதாவது தமிழ் பேசுகின்ற மக்களை தமிழ் மக்களை இரண்டாந்தர பிரஜைகளாக ஒடுக்குவது மாத்திரமல்ல அவர்களுடைய சகல உரிமைகளையும் கொஞ்சம் கொஞ்சமாக பறித்து இரண்டாந்தர பிரஜைகள் ஆக்கிக் கொண்டு, நீங்கள் இன்னொரு நாட்டிற்கு அந்த நாட்டில் உரிமையைக் கொடு என்று சொன்னால்,  அதாவது அந்த நாட்டுக்கு ஒரு தனிநாட்டைக் கொடு என்று சொன்னால் உலகத்திலே எவரும் அதைக் கேட்க மாட்டார்கள்.

ஏனென்றால் நீங்கள் விசுவாசமாக அதைச் சொல்லவில்லை என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே அதை விசுவாசமாக சொல்ல வேண்டும். சொல்வதற்கு முதலில் உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.'' எனக் குறிப்பிட்டார்.