தமிழர் தாயகத்தில் முதல்முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு! தமிழக வீரர்களும் பங்கேற்பு - video

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெற்று வருகிறது.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணமலை சம்பூர் பகுதியில் பொங்கல் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில் அதில் ஒரு பகுதியாக இன்று (06) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜல்லிக்கட்டுடன் தொடங்கும் இந்த பொங்கல் நிகழ்வானது இன்றிலிருந்து ஒரு வாரத்திற்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஜல்லிக்கட்டு நிகழ்வில் 200 காளை மாடுகளும் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த பொங்கல் விழா தொடர்பில் கிழக்கில் உள்ள சமய அமைப்புகள் மற்றும் சமூக ஆய்வாளர்கள் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதாவது தைப்பொங்கல் விழா என்பது தமிழ் மாதமான தை பிறந்த பின்னரே நடத்தப்படும் ஒன்று. ஆனால் இவ்விழாவானது ஜனவரி 07 ( மார்கழி 22) இல் நடத்தவிருப்பது தமிழர் பண்பாட்டிற்கு முரணானது எனவும் கவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன், திருகோணமலையில் முன்னெடுக்கப்படவுள்ள பொங்கல் விழாவானது ஒரு பண்பாட்டு படுகொலையாகவே கருத வேண்டுமென திருகோணமலை முத்தமிழ் சங்க தலைவர் மாயன் சிறிஞானேஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.