"மக்களை பகடைக்காயாக்காதீர்கள்" ரணில் கடும்தொனியில் எச்சரிக்கை..!

“உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு விடயத்தில் எதிர்க்கட்சிகள் எம்முடன் கைகோக்க வேண்டும். இல்லையேல் தங்களின் பாதையில் செல்ல வேண்டும். அதைவிடுத்து மக்களைப் பகடைக்காய்கள் ஆக்கக்கூடாது.” இவ்வாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பில் சந்திப்பு ஒன்றின் பின்னர் செய்தியாளர்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அதிபர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களை ஏறி மிதிக்கின்ற எந்தத் திட்டங்களையும் சட்டங்களையும் நாம் முன்னெடுக்க மாட்டோம். நாட்டின் நலன் கருதியும் நாட்டு மக்களின் எதிர்கால நலன் கருதியுமே திட்டங்களை நாம் முன்னெடுக்கிறோம்.

எமது ஆட்சியில் எந்தச் சட்டமும் மக்களுக்குப் பாதகமாக அமையாது. உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான தகவலை வெளியிடுகின்றன.

இதேவேளை, எதிர்க்கட்சிகள் தங்கள் வாக்கு வங்கிக்காக மக்கள் மத்தியில் பொய்ப் பிரசாரத்தை முன்னெடுக்கின்றன. நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமெனில் எதிர்க்கட்சியினர் எம்முடன் கைகோக்க வேண்டும்.

இல்லையேல், தங்கள் பாதையில் செல்ல வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். அதைவிடுத்து மக்களைப் படைக்காய்கள் ஆக்கக்கூடாது.” – என்றார்.