ஒன்றுமே நடக்காது -இலங்கை அரசியல் அப்படித்தான்

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு வெளிநாட்டவர்கள் உட்பட 269 பேரை பலியெடுத்து பலரை காயப்படுத்திய கொடூர தாக்குதலான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து இன்று நான்கு வருடங்கள் கடந்தும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவே இல்லை.அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியான தீர்வும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சனல் 4 தற்போது இது தொடர்பாக ஆவணப்படம் ஒன்றை வெளியிட்ட நிலையில் தென்னிலங்கையில் அரசியல்வாதிகள் மத்தியில் கூச்சல்கள் எழும்பத் தொடங்கிவிட்டன.

இது அல்லாவிற்காக நடத்தப்பட்ட தாக்குதல் என பேரினவாத அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.ஆனால் ஒருபடி மேலே போய் சனல் 4 இற்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் தீராப்பகை உள்ளதாக வேடிக்கையான கருத்தை தெரிவித்துள்ளார் நாமல் ராஜபக்ச.

வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது கொத்து கொத்தாக தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு இனப்படுகொலை நடந்தபோது அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை என முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைத்தது இலங்கை அரசு.

இல்லை அங்கு நடந்தது இனப்படுகொலை தான் என தக்க ஆதாரத்துடன் ஆவணப்படமொன்றை வெளியிட்டது சனல்4.ஆனால் என்ன நடந்தது தமிழ் மக்களுக்கு இதுவரை நீதியும் கிடைக்கவில்லை அது மறந்த விடயமும் ஆகிவிட்டது.

இதேபோன்றுதான் தற்போதும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில், இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார், தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்பதை விலாவாரியாக சம்பந்தப்பட்டவர்களின் நேர்காணல் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியது சனல் 4.இதில் முக்கியமானவர் பிள்ளையானின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் அசாத் மௌலானா.

சரி இதற்கு பின்னால் அப்படி ஒன்றும் இல்லை என்றால் முறையான விசாரணையை ஆரம்பித்து குற்றவாளியை பிடிப்பது தானே முறை. அதனை ஏன் செய்யத் தயங்குகின்றது இலங்கை அரசு.

வன்னியில் நடந்த இறுதி யுத்தத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையே தீர்வைப்பெற்றுத்தரும் என தமிழ் மக்கள் இன்றுவரை கோரிக்கை விடுத்து வருகின்றனர்.ஆனால் அதனை உதாசீனம் செய்து தட்டிக்கழித்து வருகிறது இலங்கை அரசாங்கம். தற்போது இலங்கைத்திருநாட்டின் சொந்த மக்கள் என கூறப்படும் சிங்கள மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாகவும் சர்வதே விசாரணை நடத்தப்பட வேண்டுமென தென்னிலங்கையில் கோரிக்கை வலுத்து வருகின்றது.

ஆனால் இது எதுவும் நடக்கப்போவதில்லை என்பதே நிதர்சனம்.வன்னியில் தமிழ் மக்களை கொத்து கொத்தாக கொன்றொழித்த இலங்கை அரசாங்கத்திற்கு வெறும் 269 பேர் பலியெடுக்கப்பட்டது என்பது பெரிதாகவா தெரியப்போகின்றது.

ஆக மொத்தத்தில் இந்த விடயமும் சில நாட்கள் பெரிதாக பேசப்படுமே ஒழிய வேறெதுவும் நடக்கப்போவதில்லை. ஏனெனில் இலங்கையின் அரசியலும் ஆட்சித் தலைவர்களும் அப்படி.