தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு: அமெரிக்க எச்சரிக்கையின் எதிரொலி

சுற்றுலா வலயங்கள் தொடர்பில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் தொடர்ந்தும் நடைமுறைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி, காவல்துறையினருக்கு மேலதிகமாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர், இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அறுகம்பே, ஹிக்கடுவ, வெலிகம, மிரிஸ்ஸ, திக்வெல்ல போன்ற இடங்களில் தமது படையினர் நிலைகொண்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, அறுகம்பேயில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இவர்கள் கொழும்பு, மாவனல்லை மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய சுற்றுலா வழிகாட்டி நிறுவனத்தின் ஆலோசகர் மனோஜ் மாண்டகே தெரிவித்துள்ளார்.