மோடியை வரவேற்க கொழும்பில் விசேட ஏற்பாடுகள் : பல வீதிகளை மூடுவதற்கும் தீர்மானம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை இரவு நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில் அவரை வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக தலைநகர் கொழும்பின் பல பகுதிகளில் பதாதைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, இருநாட்டு தேசியக் கொடிகளும் பறக்க விடப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் தாய்லாந்தின் பாங்கொக் நகரத்திலிருந்து இன்றைய தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளார்.

இதனால், இந்திய பிரதமரின் பாதுகாப்பை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இதேநேரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்திய பிரதமரின் வருகையை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதியை அவ்வப்போது மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவிருப்பர்கள் திட்டமிட்டு தங்களது பயணங்களை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாளை சனிக்கிழமை  காலி முகத்திடல், சுதந்திர சதுக்கம், பத்தரமுல்லை அபேகம ஆகிய பகுதிகளையும் அவ்வப்போது மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணி முதல் காலை 10.00 மணி வரை அநுராதபுரம் நகரம், ரயில் நிலைய வீதி மற்றும் ஸ்ரீ மகாபோதி அண்மித்த பகுதிகளை அவ்வப்போது மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காக வாகன சாரதிகளுக்கு பொலிஸாரால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரதமர் மோடியின் வருகையை பாதுகாப்பதற்கும், சுமூகமான முறையில் நிறைவேற்றுவதற்கும் தற்காலிக கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.