இலங்கை இராணுவம் ஏற்றுமதி செய்யவுள்ள உணவுப் பொதி




இலங்கைக்கு அன்னிய செலாவணியை ஈட்டும் வகையில் இலங்கை இராணுவம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொதியை வெளிநாட்டு இராணுவ சேவைகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது.

இராணுவத்தின் கூற்றுப்படி, மீல்-ரெடி-டு-ஈட் (Meal- Ready-to-Eat)(MRE) ரேஷன் பொதி ஆரம்பத்தில் மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உள்நாட்டுப் போரின் போது இலங்கை இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது.

எனினும், இலங்கை இராணுவத்தால் அறுவடை செய்யப்பட்ட அரிசி மற்றும் காய்கறிகளைப் பயன்படுத்தி, கந்தகாடு இராணுவப் பண்ணையில் நடத்தப்பட்ட பதப்படுத்துதல் மற்றும் பொதியிடல் மூலம், இலங்கை இராணுவத்தால் இப்போது உணவுப் பொதியை உற்பத்தி செய்ய முடிகிறது.

உணவு பதப்படுத்தும் மையம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விவசாய மற்றும் பிற நிபுணர்களால் கண்காணிக்கப்படுகிறது, மேலும் இது உணவை மாசுபடுத்தும் பாக்டீரியாவைத் தடுக்கும் திறன் கொண்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

இலங்கை இராணுவம் தினமும் 1750 முதல் 2000 MRE ரேஷன் பொதிகளை ரூ. 1375 செலவில் உற்பத்தி செய்கிறது. MRE ரேஷன் பொதி இறக்குமதியை இடைநிறுத்தியதன் மூலம் இலங்கைக்கு கிட்டத்தட்ட ரூ. 153 மில்லியன் சேமிக்கப்பட்டதுடன் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் MRE ரேஷன் பொதிகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் அந்நிய செலாவணியை ஈட்ட முடியுமென நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.