கடந்த மாதம் நெடுந்தீவில் ஐவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இடம் பெற்று வருகின்றது.
இந்நிலையில் கொலையுடன் சம்பந்தப்பட்ட கொலையாளி இன்றைய தினம் (09.05.2023) ஊர்காவற்துறை நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்குட்படுத்தப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த (22.04.2023) ஆம் திகதி நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து ஐந்து முதியவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதுடன், 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் (27.04.2023) அன்று உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குறித்த வீட்டில் சம்பவம் இடம்பெற்ற தினத்திற்கு இரண்டு தினங்களுக்கு முன்பிருந்து தங்கியிருந்த நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் கொலை செய்யும் போது சந்தேகநபர் அணிந்திருந்ததாக கூறப்படும் சாரம் என்பவற்றை குறித்த வீட்டின் கிணற்றில் இருந்து பொலிஸார் மீட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.